For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா?அதிமுகவில் அடுத்தது என்ன?

By BBC News தமிழ்
|
ஓபிஎஸ்
BBC
ஓபிஎஸ்

சசிகலா சொத்துகள் அரசுடைமை, எடப்பாடி பழனிசாமியின் சீற்றம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் நீக்கம் என அ.தி.மு.கவை மையப்படுத்தியே அரசியல் களம் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் திருப்பதியில் சாமி தரிசனம், மௌனப் புன்னகை என மர்மமாகவே வலம் வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்?

Click here to see the BBC interactive

ஆர்வம் இல்லாத ஓ.பி.எஸ்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் மாவட்டம்தோறும் தீவிரப் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரப் பயணத்தை நிறைவு செய்த முதல்வர், புதன்கிழமை மாலை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னைப் பார்த்தால் பயப்படுவது போலத் தெரிகிறதா. நீங்களும் இத்தனை ஆண்டுகாலம் என்னைப் பார்த்துக் கொண்டேதானே இருக்கிறீர்கள். நான் எந்த மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்' என சசிகலாவை மையப்படுத்திக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து, சசிகலா மற்றும் அவர் சார்ந்தவர்களின் சொத்துகளை அரசுடையாக்கப்பட்டது' குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. நீதிமன்ற உத்தரவுப்படியே சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகின்றன. இதற்கும் அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது' என்றார்.

ஓபிஎஸ்
BBC
ஓபிஎஸ்

அண்ணா தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, தொடர் விளம்பரங்கள், பிரசாரக் கூட்டங்கள் எனப் பரபரப்பாக சுழன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், முதல்வர் வேட்பாளராக அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முன்மொழிகிறேன்' எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், அதன்பிறகு அமைதியாகிவிட்டார். சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் தொடங்கிய கட்சியின் முதல் பிரசாரக் கூட்டத்திலும் ஆர்வமில்லாமல்தான் ஓ.பி.எஸ் பங்கேற்றார். எடப்பாடியை மீண்டும் முதல்வராக்குவோம்' என்றோ, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள்' என்றோ எந்த இடத்திலும் அவர் பேசவில்லை.

கவனிக்க வைத்த விளம்பரங்கள்!

தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெயபிரதீப், கடந்த ஜனவரி 28 அன்று சசிகலாவுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், சசிகலா பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ வேண்டும்' எனப் பதிவிட்டார். இதற்குப் பதில் கொடுத்த திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், அரசியல் என்பதே அறம் சார்ந்த பணிதானே' எனப் பதிவிட்டிருந்தார். இது எடப்பாடி தரப்பினரை ஆவேசப்பட வைத்தது. காரணம், இந்தப் பதிவுக்கு முதல் நாள்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருந்தார் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்.

தவிர, துணை முதல்வர் வெளியிடும் விளம்பரங்களையும் உற்று கவனித்து வருகின்றனர் முதல்வர் தரப்பினர். ஜல்லிக்கட்டு நாயகர்', நிதிநிலை நாயகர்' என்றெல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு தற்போது முதல்வன்' என ஓ.பி.எஸ் விளம்பரம் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இதன் காரணமாக, எனது அரசு', நான் எடுத்த முடிவு' என்ற வார்த்தைகளையும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகிறார்.

ஓபிஎஸ்
BBC
ஓபிஎஸ்

ஓ.பி.எஸ்ஸின் மௌனம்' குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், சசிகலா வருகிறார்.. வருகிறார் என்று சொன்னது முதல் அவர் வந்துவிட்டது வரையில் எந்தக் கருத்தும் சொல்லாமல் வீட்டுக்குள்ளேயே மௌனமாக அமர்ந்திருக்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.கவுக்கு பின்னடைவு ஏற்படுத்த ஓ.பி.எஸ் எதாவது சதிசெய்கிறாரா என்று இ.பி.எஸ்ஸை பார்க்கச் சொல்லுங்கள்' எனக் கமென்ட் அடித்தார்.

ஓ.பி.எஸ்ஸின் மனநிலை!

சசிகலா வருகைக்குப் பிறகு ஓ.பி.எஸ்ஸின் மனநிலை என்ன?" என தேனி மாவட்டத்தில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழுக்காக பேசிய அவர்கள், எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால செயல்பாடுகளை பன்னீர்செல்வம் ரசிக்கவில்லை. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் ஓ.பி.எஸ் பேசும்போது, ஆட்சி அதிகாரம் இருக்கும் வரையில் அனைத்தும் நன்றாக இருக்கும். தேர்தல் முடிந்த பிறகு அந்தப் பேச்சுக்களே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கட்சி நன்றாக இருந்தால்தான் ஆட்சிக்குப் பலம். எனவே, அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதுதான் சரியானதாக இருக்கும்' என்றார்.

மேலும், அமைச்சர்கள் எல்லாம், சசிகலா ஏதோ குற்றம் செய்தது போலப் பேசுகிறார்கள். எல்லா அமைச்சர்களும் சம்பாதித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை நிறைவு செய்துவிட்டு அவர் வந்துவிட்டார். அவரையும் அரவணைத்துச் செல்லாமல் தனித்துச் செயல்படுவது நன்றாக இருக்காது' எனவும் மனம் திறந்து பேசினார். இதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் சொல்லித்தான் ஜெயப்ரதீப், முகநூலில் பதிவிட்டார்" என்கின்றனர்.

ஓபிஎஸ்
BBC
ஓபிஎஸ்

கொதிக்கவைத்த வேட்பாளர் பட்டியல்!

தொடர்ந்து அவர்கள் பேசுகையில், சசிகலாவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார் சி.வி.சண்முகம். அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்தது சசிகலாதான். ஓ.பி.எஸ் ஆதரவாளராக விழுப்புரம் லட்சுமணன் இருந்ததால், அவரைத் தூக்கிவிட்டு சண்முகத்துக்குப் பதவி கொடுத்தார். தற்போது யாரோ கொடுத்த அழுத்தத்தில் குற்றப் பரம்பரரை' என்றெல்லாம் பேசுவதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. அ.தி.மு.கவில் சாதிரீதியாக பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறீர்களா?' எனவும் வருத்தப்பட்டார். இதுவரையில் சசிகலா குறித்து அவர் எதையும் பேசவில்லை. சசிகலா பேசும்போது பதில் சொல்லலாம். அதுவரையில் யூகத்தின் அடிப்படையில் பேசுகிறவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டாம்' என ஓ.பி.எஸ் நினைக்கிறார்.

இதுதவிர, துணை முதல்வரை கொதிக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்தது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளார் முதல்வர். இந்த விவகாரத்தில் துணை முதல்வரிடம் அவர் ஆலோசிக்கவில்லை. முதல்வர் பதவி இருக்கும்போதே அனைத்தையும் முடிவு செய்துவிட வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி அவசரம் காட்டுகிறார். இதனை ஓ.பி.எஸ் விரும்பவில்லை" என்றனர்.

மேலும், ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா தரப்பிடம் ஓ.பி.எஸ் பேசும்போது, அவசரகதியாக முதல்வரை தேர்வு செய்ய வேண்டாம். தொண்டர்களை சந்தித்து பொதுச் செயலாளராக வாருங்கள். அதன்பிறகு நீங்கள் யார் கையில் அதிகாரத்தைக் கொடுக்க நினைத்தாலும் கொடுத்துவிடுகிறேன்' என்றுதான் கூறினார். அதன்பிறகு யாருடைய தூண்டுதல் காரணமாகவோ, அவசரகதியில் ஒரு சம்பவத்தை சசிகலா நடத்தி முடித்துவிட்டார். தாங்கள் செய்தது தவறு' என்பதை தற்போது சசிகலா தரப்பும் உணர்ந்துவிட்டது" என்கின்றனர்.

விளம்பர செலவு ரூ.130 கோடி

ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?' என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் கேட்டோம். பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்வீட்டில், யாருக்கும் யாரும் அடிமையில்லை' என்கிறார். அது எடப்பாடிக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட தகவல்தான். இந்த ஆட்சியில் தான் மிகவும் அவமானப்படுத்தப்படுவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ஓ.பி.எஸ் பேசி வருகிறார். எந்த அரசு நிகழ்ச்சிகளிலும் ஓ.பி.எஸ்ஸின் பெயர் போடப்படுவதில்லை. தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளில் மட்டுமே பெயரைப் போடுகிறார்கள். இந்த விளம்பரங்களுக்கெல்லாம் 130 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் பகிர்ந்துதான் கொடுத்தனர். நான்கு பேர் பகிர்ந்து கொடுத்தும்கூட அரசு விளம்பரங்களில் பன்னீர்செல்வம் பெயரோ, படமோ வரவில்லை. அதனால்தான் ஓ.பி.எஸ் தனியாக விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார்" என்கிறார்.

பரதன்' ஓ.பி.எஸ்.. எடப்பாடி?

தொடர்ந்து பேசியவர், தற்போது முதல்வன் ஓ.பி.எஸ்' என விளம்பரம் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இது அவருக்கு உள்ளூர இருக்கின்ற ஆசையாகத்தான் பார்க்கிறேன். அவர் பார்வையில் அது நியாயமான ஆசையாகவும் இருக்கிறது. எடப்பாடியைவிட எனக்குத் தகுதியிருக்கிறது. அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்டது நான்தான்' என்பதை அந்த விளம்பரங்களில் தொடர்ந்து கூறி வருகிறார். நெருக்கடிகள் வரும்போது ஓர் ஆட்சியைக் கொடுத்தால் அதனை சேதாரம் இல்லாமல் திருப்பி ஒப்படைக்கும் நாணயக்காரர்' என ஒரு விளம்பரத்தில் சொல்கிறார். தனக்கு நாணயம் இருக்கின்றது என்று சொன்னால், யாருக்கு நாணயம் இல்லை என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார். தான் பரதனாக நடந்து கொண்டேன்' என்கிறார். அப்படியானால், யார் பரதனாக நடந்து கொள்ளவில்லை?' என அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அரசியல் தெரிந்த யாராலும் புரிந்து கொள்ள முடியும்.

அ.தி.மு.க வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை அறிவிப்பதற்காக, ஓ.பி.எஸ்ஸின் வீட்டுக்கு 2 முறை அமைச்சர்கள் சென்றனர். முதல்வர் வேட்பாளரை இப்போது அறிவிக்க வேண்டாம், தேர்தல் முடியட்டும்' என்றார் ஓ.பி.எஸ். ஒருகட்டத்தில் அவ்வாறு அறிவித்தாலும் அதனை முழுமனதாக ஓ.பி.எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த விளம்பரங்கள் காட்டுகின்றன. ஒருமுறை அறிவித்துவிட்டால் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். இன்று வரையில் எந்த மேடையிலும், எடப்பாடியை முதல்வராக்க உழைப்போம்' என ஓ.பி.எஸ் கூறவில்லை. சசிகலா ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஓபிஎஸ் மகன்
BBC
ஓபிஎஸ் மகன்

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சசிகலாவைச் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேட்டபோது, அவர் சேர வேண்டும் என்றால் தலைமைக் கழகத்தில் பேசி முடிவு செய்வோம்' என்றார். பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாகக் கொடுத்த கடைசி பேட்டியும் இதுதான். தர்மயுத்தம் நடந்தபோதே தினகரனை சென்று சந்தித்தார். இப்போது அவர் கடைப்பிடிக்கும் மௌனமும் கொடுக்கப்படும் விளம்பரங்களும் ஏதோ ஒன்று நடக்கப் போவதையே சுட்டிக் காட்டுகிறது. அது எப்போது, எப்படி நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார்.

ஓ.பி.எஸ்ஸின் 3 தைரியங்கள்!

ஓ.பி.எஸ்ஸின் தனி ஆவர்த்தனம்' குறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், தர்மயுத்தத்தின்போது ஓ.பி.எஸ்ஸுக்கு இருந்த ஆதரவு தற்போது கட்சி வட்டாரத்தில் இல்லை. அவர் ஒன் மேன் ஆர்மியாகவே வலம் வருகிறார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தேர்தல் நெருங்கி வருகிறபோது கட்சியின் வேட்பாளர் என அங்கீகரிக்கும் ஏ ஃபார்மும் இரட்டை இலையைக் கோரும் பி ஃபார்மும் கொடுக்க வேண்டும். இதில், ஒருவர் மட்டுமே கையொப்பமிட்டால் செல்லாது. ஓ.பி.எஸ்ஸின் தைரியத்துக்கு இதுவும் முக்கிய காரணம். முதல் தைரியம் பா.ஜ.க அவர் பின்னால் இருப்பது, இரண்டாவது தைரியம் சசிகலா வெளியில் வந்துவிட்டது, மூன்றாவது தைரியம் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கையொப்பம் உள்ளிட்டவை. ஓ.பி.எஸ் கையொப்பமிட மறுத்தால் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலே வெளியில் வராது. எனவே, ஓ.பி.எஸ்ஸின் மௌனத்தையும் விளம்பரங்களையும் சேர்த்தே பார்க்க வேண்டிய சூழலுக்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார்" என்கிறார்.

முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ்ஸை ஏற்க மறுக்கிறாரா ஓ.பி.எஸ்?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் கேட்டோம். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர்' எனத் துணை முதல்வர் அறிவித்தார். இதுதவிர பல கூட்டங்களில், மிகச் சிறப்பாக அம்மாவின் ஆட்சியை நடத்திச் செல்கிறார்' என முதல்வரை மனதார அவர் பாராட்டியிருக்கிறார். நேற்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் கொடுத்தார். துணை முதல்வரிடம் கேட்டிருந்தாலும் பதில் கொடுத்திருப்பார். இருவரும் ஒருமித்த கருத்தோடுதான் உள்ளனர். இதில் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது" என்றவரிடம், இருவரும் வெளியிடும் விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. தேர்தல் பிரசாரங்களிலும் துணை முதல்வர் ஆர்வம் காட்டவில்லையே?" என்றோம்.

இது என்ன தி.மு.கவா?

விளம்பரங்களைப் பொறுத்தவரையில் அனைத்தும் புரோட்டாகால்படியே நடக்கிறது. அரசு விதிகளின்படி முதல்வர்தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்புரீதியாக துணை முதல்வர் பதவி என்பது நாமே உருவாக்கிக் கொண்டது. இதுவே கட்சி தொடர்பான விளம்பரங்களில் இருவரின் பெயர்களும் இடம்பெற்று வருகின்றன. துணை முதல்வரின் துறைகளிலும் ஏராளமான சாதனைகள் உள்ளன. அதனை அவர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இருவரது பார்வையும் ஒன்றுதான். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் உள்பட அனைத்து நிகழ்வுகளிலும், நமக்குள்ள வேற்றுமைகளைக் களைந்து உழைக்க வேண்டும்' என துணை முதல்வர் பேசினார்.

இந்தக் கட்சி எப்படியாவது பிளவுபட வேண்டும்' என நினைப்பவர்கள்தான் தகவல்களைப் பரப்புகின்றனர். முதல்வரும் இதற்கு விளக்கமளித்துள்ளார். அவர்களுக்குள் எந்தப் பிளவுகளும் இல்லை. 2021 ஆம் ஆண்டு அம்மா ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்' என்பதுதான் இருவரின் லட்சியமும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போது முதல்வர் பிரசாரம் செய்கிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு துணை முதல்வர் பிரசாரம் செய்வார். இது ஒன்றும் தி.மு.க போலக் குடும்பக் கட்சி கிடையாது. ஒரு பக்கம் அப்பா செல்வது, மறுபக்கம் மகன் செல்வது, இன்னொரு இடத்துக்கு அத்தை செல்வது என்பது போலக் கிடையாது. இது தொண்டர்களைக் கொண்ட கட்சி. எனவே, எந்த வேறுபாடுகளும் இங்கு கிடையாது" என்றார் உறுதியான குரலில்.

மார்ச் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ளது வெறும் சலசலப்பா.. கொந்தளிப்பா?' என்பது தெரிந்துவிடும்.

BBC Indian sports woman of the year
BBC
BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
What will happen in AIADMK as Sasikala is in out?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X