ஆம்பூர் பிரியாணி திருவிழாவும், மாட்டுக்கறி சர்ச்சையும்: ரத்து செய்யப்பட்டது ஏன்?
பிரியாணி அண்டாவுக்கு இரண்டு பக்கமும் நெருப்பு. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழாவுக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணி. இப்போது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது ஆம்பூர். தங்கள் மாவட்டத்தின் அடையாளமான இந்த உணவை கொண்டாடும் வகையிலும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையிலும் இந்த மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்தது மாவட்ட நிர்வாகம்.
ஆனால், இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டுக் கறி பிரியாணியும் போடவேண்டும் என்று தலித் அமைப்புகள் வலியுறுத்த, இந்த யோசனையை இந்துத்துவ அமைப்பு எதிர்க்க கடைசியில் மழையைக் காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது விழா.
ஆம்பூர் பிரியாணியின் சிறப்பு
நீண்ட நேரம் தகதகவென எரியாமல் மிகவும் நிதானமாக எரியும் விறகு அடுப்புதான் ஆம்பூர் பிரியாணியின் அசத்தலான சுவைக்கு காரணம். மட்டன், சிக்கன் போன்றவைகளில் மட்டுமே பிரியாணி தயாரிக்கப்பட்ட நிலையில் இப்போது பலவகையான இறைச்சிகளையும், மீன் வகைகளைக் கொண்டும் இப்போது பிரியாணி செய்யப்படுகிறது. ஆம்பூர் பிரியாணியைப் பொறுத்தவரை அதில் பாசுமதி அரிசி பயன்படுத்துவதில்லை. சீரக சம்பா அரிசியே பயன்படுத்தப்படுகிறது.
- பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? - நிபுணர்கள் தரும் விளக்கம்
- டீடாக்ஸ் டயட்டால் உடலில் நச்சுகளை வெளியேற்ற முடியுமா? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
- மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி?
நெய்க்கு பதில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். கர்நாடக நவாப்புகளின் சமையலறையில் தொடங்கியது இந்த பிரியாணியின் பாரம்பரியம்.
ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக ஆம்பூர் வட்டத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழா 13, 14 ,15 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று மட்டும் பகல் 1 முதல் இரவு 8 மணி வரை இதை நடத்தவும் திட்டமிடப்பட்டது. நுழைவுக் கட்டணம் இன்றி மக்களை அனுமதிக்கவும் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும், பார்சல் தர மஞ்சள் பையைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
பிரியாணி திருவிழாவை நடத்தி அதனை ஆவணப்படுத்தி அரசுக்கு சமர்ப்பித்தால் ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, பொதுமக்களை திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அழைப்பு விடுத்திருந்தார்.
எழுந்தது மாட்டுக்கறி சர்ச்சை
இந்நிலையில்தான் மாட்டுக்கறி சர்ச்சை எழுந்தது. "ஒரு சமூகத்தினரின் விருப்ப உணவான மாட்டுக்கறியை இந்த பிரியாணி திருவிழாவில் புறந்தள்ளுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்தது. இத் திருவிழாவில் மாட்டுக்கறி உணவை சேர்க்கவேண்டும். மறுத்தால், "இந்த அநீதியை எதிர்த்து சமூக நீதி வெற்றிபெற" வர்த்தக மையத்திற்கு எதிராக மாட்டுக்கறி பிரியாணியை இலவசமாக விநியோகிக்கப்போவதாக கோட்டாட்சியர் காயத்ரியிடம் கடிதம் அளித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணை செயலாளர் ஓம்பிரகாஷ்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தினர், பகுஜன் சமாஜ் கட்சியினரும் இதே போன்ற கடிதத்தை ஆம்பூர் வட்டாட்சியரிடம் அளித்தனர்.
ஆம்பூரில் அன்றாடம் 10ஆயிரம் கிலோ அளவுக்கு விற்பனையாகிறது மாட்டிறைச்சி. அந்தளவுக்கு அது அங்குள்ளவர்களில் பெரும்பான்மையினரால் விரும்பியுண்ணப்படுவதாக இருக்கிறது. ஆனாலும் ஆம்பூரில் நடக்கும் "பிரியாணி திருவிழா" என்கிற பொதுநிகழ்வில் அரசே ஒதுக்கிவைப்பதை ஏற்கமுடியாது என்று அக்கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் மாட்டிறைச்சி நெடுங்காலமாகவே இடம்பெற்றிருப்பதை பண்பாட்டு மானுடவியல் சார்ந்த ஆய்வுகள் பலவும் நிறுவியுள்ளன.தலித்துகள், இஸ்லாமியர் மட்டுமன்றி சாதி மதம் கடந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விரும்பியுன்கிற - அவர்களின் கொண்டாட்டத்திற்குரிய மாட்டுக்கறியின் மீதான ஒம்பாமையும் புறக்கணிப்பும் இம்மக்களின் உணவுப்பண்பாட்டை அவமதிப்பாதாகி விடும் என்பதை உணர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். என தமுஎகச கட்சியின் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்து முன்னணி எதிர்ப்பு
இதனிடையே "நமது பண்பாட்டிற்கும் ஒவ்வாத உணவுப் பழக்கத்திற்கும் திருவிழா நடத்துவது கண்டிக்கத்தக்கது" என இந்து முன்னணி கட்சி இந்த திருவிழாவுக்கான எதிர்ப்பைத் தொடங்கியது.
வாஜ்பாயி ஆட்சி காலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் கட்டப்பட்ட ஆம்பூர் வர்த்தக மையத்தில் தேவையற்ற உணவுத் திருவிழாக்கள் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு பகுதி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உணவை விளம்பரப்படுத்த, சில வியாபாரிகள் விருப்பத்திற்காக அரசு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததது என்றும், சிலர் இதில் மாட்டுக்கறியையும் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் அமைதியான ஆம்பூரில் இதனால் பிரச்சனை ஏற்படும் என்றும் இந்து முன்னணி தமது அறிக்கையில் தெரிவித்தது.
இரு தரப்பின் இருவேறு விதமான எதிர்ப்புகளைக் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்தனர். இந்நிலையில், அடுத்த சில நாள்களில் மழை இருப்பதால் தேதி குறிப்பிடாமல் ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=5F7uPcT-RwQ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்