For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை பொழிவது ஏன்?

By BBC News தமிழ்
|
மாணவர்களோடு ஆசிரியர் பகவான்
BBC
மாணவர்களோடு ஆசிரியர் பகவான்

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, அவரை அனுப்பக்கூடாது என மாணவர்களும், பெற்றோர்களும் கதறி அழுது, கோஷமிட்டு நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது.

அவர் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளிக்கும், அதே மாவட்டத்தில் அவர் பிறந்த ஊரான பொம்மராஜுபேட்டை கிராமத்திற்கும் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டார் ஆசிரியர் பகவான்.

அவர் பணிபுரியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் நமக்கு வழிகாட்டியது.

ஆசிரியர் பகவான் செய்த மேஜிக்

பகவான் வேறு பள்ளிக்குச் செல்கிறார் என்பதை ஏற்காத குழந்தைகள் அவரை தடுத்தது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பேசப்பட்டது.

1980ல் தொடங்கப்பட்ட வெளியகரம் அரசுப்பள்ளியின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட 28 வயதே ஆன ஆசிரியர் பகவான், அவரது முதல் பணியிடத்திலேயே அனைத்து விருதுகளையும் பெற்றுவிட்டது போல உணருகிறார்.

பகவான் ஆசிரியரிடத்தில் ஏன் இத்தனை அன்பு என்று கேட்டபோது, ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு பதில் வருகிறது. பலரிடமும் கிடைத்த பதில்,''அன்பா பேசுவாரு, எளிமையா பாடம் நடத்துவாரு, எங்களுக்கு பிடிக்கும் நிறையா'' என்கிறார்கள் குழந்தைகள்.

ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?
BBC
ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?

மாணவர்களின் அன்பை பெற என்ன செய்தார் ஆசிரியர் பகவான்?

''என்னிடம் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் என் வீட்டுக்குழந்தை போல எண்ணுகிறேன். படிக்கவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை கேட்பேன். பின்னர் அதை எப்படி சரி செய்யலாம் என்று அந்த குழந்தைக்கு உதவுவேன். அவர்களின் ஊர் திருவிழா, குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் சோகமான தருணங்களில் நான் ஒரு அண்ணனாக இருக்கிறேன். என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். அதுவே இந்த குழந்தைகளிடம் நீங்கா அன்பை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் என் பணியிட மாறுதலை தள்ளிப்போடும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை,'' என்கிறார் பகவான்.

அவரது வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது நுழைந்தோம். ஆங்கில வகுப்பில் மரங்களைப் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ''எங்க வீட்டில் இருந்து நடந்து வரும்போது நிறைய மரங்கள்-ட்ரீஸ் இருக்கும். நான் அவற்றை உற்றுகவனிப்பேன்..அப்சர்வ் செய்வேன்,'' என பேசிவிட்டு, இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்தைகளை எழுதியிருந்தார். அதற்கு ஏற்ற படங்களையும் வரைந்திருந்தார்.

கடைசிவரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களிடம் நின்றுகொண்டு, ''நீங்களும் ட்ரீஸ்சை அப்சர்வ் பண்ணுவீங்காளா?,'' என்று கேட்டவுடன் சிரிப்பும் கேள்விகளும்.

ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?
BBC
ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?

''பள்ளிப்பருவத்தை குழந்தைகள் முகத்தில் பார்க்கிறேன்''

பள்ளிக்கூடத்திற்கு வந்த குழந்தைகள் வீட்டில் என்ன சிக்கல்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல், வெறும் பாடம் மட்டும் நடத்தி, மார்க் வாங்கு என்று சொல்லமுடியாது என்பது பகவானின் முடிவு. ''எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்னை வளர்த்தெடுத்தார்கள். வறுமை, குடும்ப பிரச்சனைகள் என சுமைகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்களின் கனிவான வார்த்தைகளும்,கவனிப்பும்தான் எனக்கு ஆறுதலை தந்தன. என் மாணவர்களிடமும் அதேபோல நடந்து கொள்கிறேன்,'' என்கிறார் பகவான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பகவானின் குடும்பம் குடிசையில்தான் வசித்தது. வறுமையின் வலி தெரிந்த பகவான், வேகமாக இயங்கும் போட்டி நிறைந்த உலகில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் சவால்களை நன்கு அறிந்தவராக இருக்கிறார்.

தனது பள்ளிப்பருவத்தின் அனுபவங்களைப் பசுமையாக மனதில் பதித்துவைத்திருக்கும் பகவான், ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் தனது பள்ளிப்பருவத்தைப் பார்ப்பதாக கூறுகிறார். அரசுப்பள்ளியில் படித்த பகவான், அரசுப்பள்ளியில் வேலை செய்வது தனக்கு கிடைத்த வரம் என்கிறார்.

ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?
BBC
ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?

செர்ரி பழம் கொடுத்த பிஞ்சு கைகள்

''ஏழாம் வகுப்பில் செர்ரி மரம் பற்றிய பாடம் நடத்தினேன். செர்ரி மரம் நம் ஊரில் கிடையாது. நானே பார்த்ததில்லை என்பதால், மாணவர்களுக்குக் காண்பிக்க மல்டிமீடியா வகுப்புக்கு கூட்டிச்சென்று இணையத்தில் காண்பித்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு மாணவி என் கையில் செர்ரி பழங்களை தந்தாள். சார் இதுதான் நீங்க பாடம் நடத்திய செர்ரி மரத்தின் பழம். அந்த குழந்தையின் உறவினர் ஒருவர் டெல்லியில் இருந்து கொண்டுவந்ததை அவள் சாப்பிடாமல், எனக்கு அந்த குழந்தை கொடுத்தாள். செர்ரி மரம் பாடத்தை அந்த குழந்தை நன்கு உள்வாங்கியுள்ளது என்பதை அறிந்தபோது, பெருமகிழ்ச்சியாக இருந்தது. செர்ரியின் சுவை அத்தனை இனிப்பு இல்லை என்றாலும், அந்த பிஞ்சு கைகளில் பிசுபிசுப்புடன் எனக்காக கொண்டுவந்து தந்த சம்பவம் என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது'' என உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் பகவான்.

ஒரு மாணவியின் தந்தை குடிப்பழக்கத்தில் இருப்பவர் என்பதால், அந்த குழந்தை பள்ளிக்கு வருவதே குடும்பச் சூழலை மறப்பதற்கு என்ற நிலை இருப்பதாக கூறினார்.

''எங்க அம்மா, அப்பாகிட்ட சார் பேசினாரு. அப்பா மாறனும் அதுதான் என் ஆசை,'' என்று சொல்லிவிட்டு கண்ணீர்விடுகிறாள் ஹேமஷிரி. ''அழாமல் இரு, சரியாகிடும், நான் இருக்கிறேன்,'' என தைரியம் சொல்லி ஹேமஷிரியை சமாதானம் செய்துள்ளார் பகவான்.

பகவானைப் போல பல ஆசிரியர்கள்

ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?
BBC
ஆசிரியர் பகவானை எங்களுக்கு ஏன் பிடிக்கும்?

இந்த அளவுக்கு மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான ஆசிரியரை அனுப்ப ஏன் முடிவுசெய்யப்பட்டது என்று தலைமை ஆசிரியர் அரவிந்திடம் கேட்டோம்.

''குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும். இந்த ஆண்டு உள்ள மாணவர்களின் விகிதத்தைவிட ஆசிரியர் விகிதம் அதிகமாக உள்ளதால், பணியில் உள்ள இளம் ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும் என்பது விதி. அதைத்தான் செய்கிறோம். குழந்தைகளின் அன்பை நாங்களும் புரிந்துகொண்டுள்ளோம், அதனால் பணியிட மாறுதலை தள்ளிவைத்துள்ளோம்,'' என்கிறார்.

பள்ளிக்கூடத்தின் எல்லா நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பகவான், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பிம்பத்தை மாற்றியுள்ளார் என்கிறார் அரவிந்த். ''அரசுப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய விவாதத்தை பகவான் தொடங்கிவைத்துள்ளார்," என்கிறார் இவர்.

ஊடக வெளிச்சத்திற்கு வராத பகவானைப் போல பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர், அவர்களைப் பற்றி பேசவேண்டும் என்பதற்கு எங்கள் பள்ளி ஒரு தொடக்கப்புள்ளியாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி,'' என்றார் அரவிந்த்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Why Teacher Bhagavan get students love, here we find the reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X