
369 அடி உயரம்.. 16 ஏக்கர் பரப்பு.. உலகிலேயே உயரமான சிவன் சிலை.. ராஜஸ்தானில் இன்று திறந்து வைப்பு
ஜெய்ப்பூர்: உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 'விஸ்வரூப்' என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
369 அடி உயரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் மலையின் உச்சியில் மிகவும் நேர்த்தியாக இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிவன் உறையும் ஆலயம் காக்க எமனையும் சந்திக்க தயாரான மருது சகோதரர்கள்..221 வது நினைவு தினம்

இந்தியாவும் சிவனும்..
இந்து மதத்தில் பல கடவுளர்கள் இருந்த போதிலும், சிவனும் விஷ்ணுவுமே முதன்மையான கடவுள்களாக கருதப்படுகின்றனர். ஆதிக்காலத்தில் நம் நாட்டுக்குள் இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட பிற மதங்கள் நுழைவதற்கு முன்பாக சைவம், வைணவம் ஆகிய இரு பெரும் வழிபாட்டு பிரிவுகளே இருந்தன. சிவனை வழிபடும் பிரிவு சைவம் என்றும், விஷ்ணுவை வழிபடும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்பட்டன. இந்தியாவை பொறுத்தவரை, விஷ்ணுவை விட சிவப்பெருமானுக்கே கோயில்களும், சிலைகளும் அதிகம் உள்ளன. குறிப்பாக, வட இந்தியாவில் சிவன் வழிபாட்டு தலங்கள் அதிகம்.

பிரம்மாண்ட சிவன் சிலைகள்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான சிவன் சிலைகள் இருந்த போதிலும், பிரம்மாண்ட சிலைகள் என பார்த்தால் சில மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிவன் சிலை இருக்கிறது. சிவன் நிற்பது போல காட்சியளிக்கும் இந்த சிலை, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். அந்த அளவுக்கு தத்ரூபமாக அதன் வடிவமைப்பு இருக்கிறது. அதேபோல, உத்தரகாண்டின் ரிஷிகேஷ் பகுதியிலும் அமர்ந்த நிலையில் ஒரு பெரிய சிவன் சிலை இருக்கிறது. உத்தரகாண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெள்ளம் வந்த போது, இந்த சிவன் சிலை தலை வரை தண்ணீர் ஓடியதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதேபோல, கர்நாடகாவின் கண்டுகா மலை, தமிழகத்தின் கோவை, சிக்கிமின் பக்யாங், குஜராத்தின் ஜாம் நகர் ஆகிய இடங்களில் பெரிய சிவன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

உலகிலேயே உயரமான சிவன் சிலை..
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில் 'விஸ்வாஸ் ஸ்வரூபம்' (விஸ்வரூபம்) என்ற பெயரில் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் மீது தவக்கோலத்தில் இந்த சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 369 அடி உயரமும், 16 ஏக்கர் பரப்பளவிலும் இந்த சிவன் சிலை பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிலையின் சிறப்பம்சங்கள்
மலைக்குன்றின் மீது வானுயரத்துக்கு உள்ள இந்த விஸ்வரூப சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தே பார்க்க முடியும். மேலும், இந்த சிவன் சிலைக்கு உள்ளேயே மின் விளங்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் கூட சிலையை நம்மால் பார்க்க முடியும். சிலையை சுற்றிப் பார்ப்பதற்காக அதற்குள்ளேயே 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிலைக்குள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் இரும்பு உருக்கு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வல்லமையுடனும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் சிலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.