கைவிட்டுடாதீங்க... எங்களுக்கு உதவுங்க... எலான் மஸ்க்கிடம் உக்ரைன் கமாண்டர் உருக்கம்
கீவ்: ‛‛ரஷ்யாவின் போரால் உக்ரைனில் உயிர் வாழ்வதற்கான சூழல் சாத்தியமற்றதாக உள்ளது. இதில் தலையிட்டு உதவி செய்யுங்கள். உங்களால் முடியாது என்றால் இதை வேறு யாரால் செய்ய முடியும்?'' என பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிடம் உக்ரைன் காமாண்டர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர்.
இருப்பினும் உக்ரைன் படைகள் பிற நாடுகளின் உதவியுடன் பொதுமக்களை படை வீரர்களுடன் இணைத்து ரஷ்யாவின் மிகப்பெரிய படைகளை எதிர்த்து வருகிறது.

மரியுபோல் மீது தாக்குதல்
மே 9ம் தேதிக்குள் உக்ரைனை முற்றிலுமாக கைப்பற்றி நாஜி படைகளை தோற்கடித்ததன் வெற்றிநாள் கொண்டாட்டமான மே 9ல் இரட்டை விழா கொண்டாட ரஷ்யா தனது படைகளுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உக்ரைனின் பதில் தாக்குதல் தொடருவதால் போர் துவங்கி 3 மாதம் நெருங்கும் நிலையில் ரஷ்யாவால் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியவில்லை. தற்போது ரஷ்ய படைகள் மரியுபோல் நகரில் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தஞ்சமடைய மறுப்பு
இதையடுத்து மரியுபோலில் உயிருக்கு பயந்து உக்ரைன் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் அங்குள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கினர். இவர்களை தஞ்சமடைய ரஷ்ய படைகள் கூறியது. அவர்கள் மறுத்தனர். இதனால் ஆலை மீது தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கிடையே ஆலையில் பதுங்கி உள்ளவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தனர். ஐநா, செஞ்சிலுவை சங்கத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 200க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர்.

எலான் மஸ்கிடம் உதவி
இந்நிலையில் தான் உக்ரைன் படையை சேர்ந்த கமாண்டர் நேரிடையாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தையும் வாங்கினார். இதையடுத்து தான் உக்ரைனின் 36வது தனி மரைன் பிரிவில் காமாண்டராக பணி செய்யும் செர்கி வால்யானா புதிதாக டுவிட்டர் கணக்கு துவங்கினார். அதில் இருந்து அவர் தங்களை காப்பாற்றும்படி எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

உங்களால் முடியாதென்றால்...
இதுகுறித்து கமாண்டர் செர்கி வால்யானா, ‛‛மக்களால் முடியாது என நம்பும் செயல்களை முடியும் என முடித்து காட்டுவதற்காக வேறு கிரகத்தில் இருந்து நீங்கள் வந்ததாக கூறுகின்றனர். நமது கிரகங்கள் அருகே அடுத்தடுத்து உள்ளன. இங்கு வாழ்வதற்கான சூழல் சாத்தியமற்றதாக உள்ளது. இதில் தலையிட்டு அசோவ்ஸ்டலில் இருந்து வெளியேற உதவி செய்யுங்கள். உங்களால் முடியாது என்றால் இதை வேறு யாரால் செய்ய முடியும். '' என குறிப்பிட்டுள்ளார்.

தொலைதொடர்பு உதவி
முன்னதாக ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு உதவி செய்யும்படி எலான் மஸ்க்கிடம் உக்ரைன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு நான் ஒருவேளை மர்மமான முறையில் இந்து போனால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது நல்லது என குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது. அதாவது எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் சமீபத்தில் உக்ரைனுக்கு தொலைதொடர்பு உதவிகள் செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியது. மேலும் ரஷ்யா தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் மர்மமான முறையில் இறந்தால் என எலான்மஸ்க் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மீண்டும் உக்ரைன் கமாண்டர் எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications