
ஆடாமலே தோத்துட்டு இருக்கேன்.. மைதான ஊழியர்களுடன் பணி செய்த சஞ்சு சாம்சன்-வீடியோ.. உருகும் ரசிகர்கள்
வெலிங்டன்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான இன்றைய 2வது ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இருப்பினும் இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காத நிலையில் அவர் மைதான ஊழியர்களுடன் சேர்ந்து பணி செய்த வீடியோ இணையதளத்தில் வெளியாக வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள்‛ஆடாமலே தோத்துகிட்டு இருக்கிறார் சஞ்சு சாம்சன்' என கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உலககோப்பை டி20 உலககோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் வெளியேறியது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த தோல்வியை தொடர்ந்து இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கேப்டன் ரோகித் சர்மாவையும், தேர்வு குழுவினரையும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது பெருமிதம் வாய்ந்தது.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி

நெட்டிசன்கள் விமர்சனம்
மேலும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அதிகமாக சம்பாதிப்பதாலும், தொடர்ந்து ஓய்வின்றி விளையாடுவதும் தான் உலககோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் இந்திய கோட்டை விட்டு விடுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூண்டோடு கலைக்கப்பட்டது.

சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு
தற்போது இந்தியா, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம்கட்ட இந்திய அணி நியூசிலாந்துடன் ஒருநாள் போட்டியில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா 306 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 38 பந்துகள் சந்தித்து 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் தான் இன்று 2வது ஒருநாள் போட்டி துவங்கியது. இதில் பிளேயிங் லெவன் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் ஆல்ரவுண்டராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது விமர்சனத்துக்கு உள்ளானது.

மீண்டும் கிளம்பிய விமர்சனம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்தன. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சஞ்சு சாம்சன் இடம் அளிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் இன்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. மேலும் முந்தைய போட்டியில் பொறுப்பான முறையில் அவர் ஆடி 36 ரன்கள் எடுத்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மைதான ஊழியர்களுக்கு உதவிய சாம்சன்
மேலும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பலரும் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் கருத்துகளை இணையதளத்தில் பதிவிட தொடங்கினர். இதற்கிடையே தான் இன்றைய 2வது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டது. இந்த வேளையில் மைதான ஊழியர்களுக்கு சஞ்சு சாம்சன் உதவும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதாவது இன்றைய போட்டியின்போது மழை தொடர்ந்து குறுக்கீடு செய்தது. இதனால் மைதான பாரமரிக்கும் ஊழியர்கள் மைதானத்தை மூட தார்பாலினை எடுத்து வந்தபோது அது காற்றில் பறந்தது. இந்த வேளையில் மைதானத்தில் நின்ற சஞ்சு சாம்சன் மைதான ஊழியர்களுக்கு உதவி செய்தார்.

ஆடாமலே தோத்துகிட்டு இருக்கேன்
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அது தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஹார்ட்டுடன் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தல ‛டோனி'யின் படத்தில் வரும் ‛நான் ஆடாமலே தோத்துக்கிட்டு இருக்கிறேன்' என்ற டயலாக்கை பதிவிட்டு சஞ்சு சாம்சனின் வேதனை இப்படி தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பிசிசிஐயையும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

3வது போட்டி எப்போது?
முன்னதாக இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இந்தியா பேட் செய்தபோது மழை குறுக்கீடு செய்தது. 12.1 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை பறிகொடுத்து 89 ரன்கள் சேகரித்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் அந்த அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையேயான 3வது ஒருநாள் போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.