முகத்தில் துணியை கட்டி தப்பித்தோம்.. குவைத் அடுக்குமாடி கட்டிட விபத்தில் தப்பியவர் அதிர்ச்சி பேட்டி
குவைத்: குவைத் அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில், தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
குவைத்தில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.. அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானவை.

இந்நிலையில், அங்குள்ள என்பிடிசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குவைத்தின் தெற்கு பகுதியில் மங்காப் என்ற இடத்தில் தங்குவதற்காகவே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.. 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியர்கள் தங்குவதற்காகவே இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.. இதில் தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் ஆவர்.
இந்நிலையில், இந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விடிகாலையில் சமையல் செய்தபோது எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. இந்த தீயானது, உடனுக்குடன் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது.. விடிகாலையில் நடந்த தீவிபத்து என்பதால், அனைவரும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள். இதனால் பலரது உயிர் தூக்கத்திலேயே போயின..
உயிரிழப்பு: இதுவரை 49 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பலர் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். அவர்களால் உடனடியாக தப்பித்து வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.. அதையும் மீறி தப்பிக்க முயன்றாலும், வாசல்கள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியேற முடியாமல் தீயிலேயே சிக்கி இறந்துள்ளனர். இதில் சிலர் மொட்டை மாடிக்கு தப்பி ஓடியதால் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களும், விபத்திலிருந்து தப்பி வந்தவர்களும், நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி விலகாமல் பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
மணிகண்டன்: தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு பக்கத்திலேயே மணிகண்டன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் வசித்து வருகிறார்.. இவர் விருதுநகரை சேர்ந்தவராம்.. குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த விபத்து குறித்து பிபிசி சேனலுக்கு சொன்னதாவது:
"குவைத்தில் எப்போதுமே பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நைட் ஷிப்ட் வேலைக்குதான் பலரும் செல்வார்கள். இரவு வேலையை முடித்துவிட்டு விடிகாலை வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். அப்படித்தான் சிலர் நேற்று விடிகாலை சமைத்திருக்கிறார்கள். இந்த கட்டிடத்தின் அடித்தளத்திலேயே கிச்சன் உள்ளது.. இங்கிருந்தே தீ எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.
தமிழர்கள்: அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர்.. சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்துவிட்டனர். இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்... தமிழர்களும் இந்த கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.. ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை" என்கிறார்.
அதேபோல இன்னொரு நபர் இதுகுறித்து கூறும்போது, "விபத்து நடந்த கட்டிடத்துக்கு பின்பக்கம்தான் நாங்கள் தங்கியிருந்தோம்.. விபத்து நடந்தது 2 மாடிகளும் ஒன்றாக இருக்கக்கூடிய கட்டிடம்.. அதிகாலை நாலரை மணிக்கு விபத்து நடந்துள்ளது.. இது 160 ஊழியர்கள் தங்கக்கூடிய கட்டிடமாகும். 41 இந்தியார்கள் உயிரிழப்பு என்கிறார்கள்.. ஆனால் தமிழர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை" என்றார்.
புகை மூட்டம்: தீ விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளி விபத்து குறித்து சொல்லும்போது, புகை சூழ்ந்திருந்ததை பார்த்ததுமே உடனடியாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டோம்.. பலருக்கு மூச்சுத்திணறல் வந்துவிட்டதால் தப்ப முடியவில்லை" என்று அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்












Click it and Unblock the Notifications