For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

By BBC News தமிழ்
|

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்
Reuters
ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இவர் அபராதம் செலுத்தினார். அதற்கு முன்னதாக, இவரது மனைவியின் வரி விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளும் எழுந்ததையடுத்து இவரது நன்மதிப்பு குறைந்தது.

நார்த் யோர்க்-ஷைர் தொகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டுதான் இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதற்கு முன்னதாக பொது வருவாயை கையாளும் அரசாங்க கருவூல அதிகாரியாகவும் இவர் பணியாற்றினார். மேலும், கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் ஆற்றிய பணிகளால் இவர் பிரபலமானார்.

பிரிட்டன் அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இணைந்து, தானும் பதவி விலகிய இவரது முடிவைத் தொடர்ந்தே மற்ற அமைச்சர்களின் பதவி விலகலும் நடந்தது அதன் விளைவாகவே தற்போது போரிஸ் ஜான்சன் பதவி விலகலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்.

லீஸ் ட்ரஸ்

லீஸ் ட்ரஸ்
Reuters
லீஸ் ட்ரஸ்

போரிஸ் ஜான்சனின் சுகாதாரச் செயலர் வெளியேறிய சமயத்தில், போரிஸுக்கு தன்ஆதரவை அளித்ததன் மூலம் கட்சி விசுவாசிகளிடையே தன் நிலையை உயர்த்திக்கொண்டவர் லீஸ் ட்ரஸ்.

பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை தாங்கிய இரண்டாவது பெண்மணியான இவர், பிரிட்டிஷ்-இரானிய எழுத்தாளர் நசானின் ஜகாரி-ராட்க்ளிஃப் இன் விடுதலைக்காகவும், ரஷ்யா மீது விதித்த தடைகளுக்காகவும் பெரிதும் புகழ் பெற்றவர்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக, சௌத் வெஸ்ட் நார்ஃபோக் தொகுதியிலிருந்து இவர் தேர்வானார். பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பாக இவர் வெளியிடும் சுதந்திரமான கருத்துகளுக்காக கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே பிரபலமாக அறியப்படுகிறார்.

சஜித் ஜாவித்

சஜித் ஜாவித்
Reuters
சஜித் ஜாவித்

ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர்தான், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக முதலில் அடியெடுத்து வைத்தவர். ஒருமைப்பாட்டுக்கான அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், தனது பதவி விலகலின்போது, "பிரச்னை மேலிடத்தில் இருந்து தொடங்குகிறது" என்று பேசியிருந்தார்.

2019ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்புக்காக முன்னிறுத்தப்பட்ட இவர், அப்போது நான்காம் இடத்தை பெற்றிருந்தார்.

நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் தேசிய கடன்கள் குறித்தும் இவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறை குடும்பத்தில் பிறந்த சஜித் ஜாவித்தின் தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். இப்படியான எளிய பின்னணியில் இருந்து வந்த இவர், 2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முன்பு ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்வைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஜெர்மி ஹண்ட்

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் தேர்தலின்போது, போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த இவருக்கு வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

(வெஸ்ட்மின்ஸ்டர்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்)

கொரோனா பொது முடக்கத்தின்போது, பொது சுகதாரக் குழு ஒன்றின் தலைமையாக இருந்த இவர், அரசின் கொள்கைகளையே விமர்சித்தார்.

ஒரு அட்மிரலின் மகனான இவர், ஹாட்கோர்ஸ் என்ற இணையதளத்தையும் நடத்தி வந்தார். இது மாணவர்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் விதமான இணையதளமாகும்.

2005ஆம் ஆண்டு முதல், சௌத் வெஸ்ட் சர்ரே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் இவர், 2010அம் ஆண்டு அரசின் கலாசார செயலராகவும் சுகாதரத்துறையின் தலைமையாகவும் இருந்தார்.

மைக்கேல் கோவ்

மைக்கேல் கோவ்
PA Media
மைக்கேல் கோவ்

2019ஆம் ஆண்டு நடந்த தலைவர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர் இவர். ஆனால், ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தலைமைக்கான தேர்தலின்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சனுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்ட போது, "ஜான்சனால் தலைமைத்துவத்தை தர முடியாது" என்றும் "எதிரே உள்ள சவால்களுக்கான குழுவை அமைக்க முடியாது" என்றும் பேசியவர் இவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான இவர், அமைச்சரவையின் நீண்ட-கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு கல்வி செயலராக பொறுப்பேற்ற இவர், அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் செயலாகவும் நீதி செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

நாடிம் ஸகாவி

நாடிம் ஸகாவி
Reuters
நாடிம் ஸகாவி

கொரோனா பேரிடர்க்காலத்தில் தடுப்பூசிகள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டபோது தான் ஆற்றிய பணிகளால், தன் செல்வாக்கை பெருக்கிக்கொண்டவர்.

"நான் இதுவரை செய்ததிலேயே மிக முக்கியமான பணி இது" என்று அப்போது பேசினார். அதன் மூலம், அடுத்த கேபினட்டில் கல்வி செயலராக பதவி உயர்வும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் ராஜிநாமாவுக்குப் பின் கருவூல பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகு, தானும் போய் வருவதாக, போரிஸ் ஜான்சனிடம் விடை கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

1967ஆம் ஆண்டு இராக்கில் பிறந்த ஸகாவியின் குடும்பம், சதாம் உசேன் ஆட்சி அமைத்தபோது, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்

வேதிப்பொறியியல் படித்த இவர், யூ கவ் (YouGov) என்ற ஆன்லைன் வாக்கெடுப்பு நிறுவனத்தின் மூலம் சம்பாதித்து வந்தார். முன்னதாக இவர் பொம்மை வியாபாரமும் செய்து வந்தார்.

பென்னி மோர்டண்ட்

பென்னி மோர்டண்ட்
Reuters
பென்னி மோர்டண்ட்

மேஜிக் ஷோக்கள் நடத்தும் ஒரு வித்தைக்காரரின் உதவியாளராக இருந்த இவர், அசாதரணமானவற்றை நிகழ்த்திக் காட்டுவதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றவர்.

ஏற்கனவே அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியும் காட்டியுள்ளார் பென்னி. அதாவதும் 2019ஆம் ஆண்டு பிரிட்டனின் முதல் பெண் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்றார்.

வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே, இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். போர்ட்ஸ்மௌத் தொகுதியின் உறுப்பினரான இவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவராகவும் இருந்தவர்.

டாம் டுகெந்தாட்

டாம் டுகெந்தாட்
Getty Images
டாம் டுகெந்தாட்

போரிஸ் ஜான்சனின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியை உடையவர் இவர்.

இனிவரும் காலங்களில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆற்றல்மிக்க தலைவராக இவர் இருப்பார் என்று, இவர் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சமயம் முதலே பேசப்பட்டு வந்தது.

நீங்கள் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா என்று 2017ஆம் ஆண்டு இவரிடம் கேட்கப்பட்டபோது, "கண்டிப்பாக, டிக்கட்டை வாங்க முடிந்த என்னால், ஏன் லாட்டரியை வெல்ல நான் நினைக்கக் கூடாது? என்று பதிலளித்தார்.

பென் வாலேஸ்

பென் வாலேஸ்
PA Media
பென் வாலேஸ்

யுக்ரேனில் நடந்த ரஷ்ய படையெடுப்பின்போது பிரிட்டன் கீயவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எடுக்கப்பட்ட விரைவான முடிவின் பின்னணியில் இருந்ததால் வெகுவாக கவனம் பெற்றவர் இவர். பாதுகாப்பு செயலரான இவர், முன்னாள் ராணுவ வீரராகவும் இருந்தார்.

கெர்மனி, சைப்ரிஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றிய இவர், பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிரான அயர்லாந்து குடியரசு ராணுவத்தின் வெடிகுண்டு முயற்சியை முறியடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவரசி டயானாவின் உடலை பாரிஸிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ராணுவ வீரரும் இவர் ஆவார்.

https://www.youtube.com/watch?v=CaNQsFCIK2g

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
As Boris Johnson resigns, then who will be the next PM of Britain?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X