ரெசிப்ரோகல் வரியே இருக்க கூடாது.. அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிய மெசேஜ்! உற்று பார்க்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய தினம் திடீரென மின்னணு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இதற்கிடையே அமெரிக்கா ஒட்டுமொத்தமாக அனைத்து ரெசிப்ரோகல் வரியையும் வாபஸ் பெற வேண்டும் என சீனா இப்போது வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தினசரி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலக பொருளாதாரத்தைக் குழப்பி வருகிறார். கடந்த ஏப்ரல் 2ம் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் உலகின் அனைத்து நாடுகள் மீதும் ரெசிப்ரோகல் வரியை அறிவித்தார். இந்தியா, கனடா, சீனா என எல்லா நாடுகளுக்கும் டிரம்ப் ஒவ்வொரு வரியை அறிவித்தார். இது சர்வதேச அளவில் வணிகப் பதற்றத்தை ஏற்படுத்தியது.

டிரம்ப்
இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், சில நாடுகள் பதிலடியாக வரிகளையும் அறிவித்தன. இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ரெசிப்ரோகல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரியை 145%ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இது சர்வதேச வணிகப் பதற்றத்தை அதிகரித்தது.
சீனா
அதைத் தொடர்ந்து அமெரிக்கா சீனா மாறிமாறி வரி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றைச் சீனா வெளியிட்டுள்ளது. புலிக்கு மணியைக் கட்டிய நபரால் மட்டுமே அதை அவிழ்க்க முடியும் எனத் தெரிவித்துள்ள சீனா, ரெசிப்ரோகல் வரி விவகாரத்தில் அமெரிக்கா தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதாவது சமீபத்தில் தான் டிரம்ப் நிர்வாகம் மின்னணு சாதனங்கள் மற்றும் சிப் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கிடையே ஒட்டுமொத்தமாக அனைத்து ரெசிப்ரோகல் வரிகளையும் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்குச் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ரத்து செய்யணும்
இது தொடர்பாகச் சீன வர்த்தகத் துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்கா தனது தவறுகளைச் சரி செய்ய ஒரு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெசிப்ரோகல் வரி என்ற தவறான நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அவர்கள் பழைய வர்த்தகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
புலியின் கழுத்தில் உள்ள மணியை அதைக் கட்டிய நபரால் மட்டுமே அவிழ்க்க முடியும். எனவே, ரெசிப்ரோகல் வரியால் ஏற்பட்ட பாதிப்புகளை அமெரிக்கா தான் சரி செய்ய வேண்டும். ரெசிப்ரோகல் வரியில் இருந்து சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான சீனப் பொருட்கள் இன்னும் 145 சதவீத வரியை எதிர்கொள்கிறது. இதனால் நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
அமெரிக்கா- சீனா வரிகள்
சீனா மீது முதலில் 104% வரியை விதித்திருந்த அமெரிக்கா அதைக் கடந்த வாரம் 145%ஆக உயர்த்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்கள் மீது 84% வரி விதித்திருந்த சீனா, அதை 125%ஆக உயர்த்தியது. அதேநேரம் இதற்குப் பிறகு சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தினாலும் அதற்குப் பதிலடி கொடுக்கப்போவது இல்லை என்றும் சீனா தெரிவித்தது. மேலும், அமெரிக்காவின் இந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications