6.5 கிலோ தங்கம், 380 காரட் வைரம்.. துபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கோலம்! பின்னணியில் யார் தெரியுமா?
துபாய்: இணையத்தில் தீபாவளி என்றாலே வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்கள், பூக்களால் அலங்காரம் என களைகட்டும். ஆனால் துபாயில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு ரங்கோலி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சாதாரண வண்ண பொடிகள், அரிசி மாவு, பூக்களுக்கு பதிலாக தங்க நகைகள் மற்றும் வைரங்களைக் கொண்டு இந்த ரங்கோலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.9 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள சிட்டி சென்டர் டெய்ரா வணிக வளாகத்தில் இந்த ரங்கோலி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டமாஸ் நகை நிறுவனமும், துபாயின் விழா ஏற்பாட்டு அமைப்பும் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.

பொதுவாக வீடுகளிலும், கோவில்களிலும் வண்ணப் பொடிகள், அரிசி மாவு மற்றும் பூக்களை பயன்படுத்தி ரங்கோலி கோலங்கள் போடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை துபாயில் மொத்தமாகவே வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்க நகைகளையும், வைரங்களையும் கொண்டே அழகான ரங்கோலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 213 நகைகள்
இந்த ரங்கோலியை உருவாக்க மொத்தம் 213 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெக்லஸ்கள், கனமான வளையல்கள், கம்மல்கள், மோதிரங்கள், பதக்கங்கள் என பலவிதமான நகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தின் மொத்த எடை 6.5 கிலோ ஆகும். அது மட்டுமல்ல, 380 காரட்டுக்கும் அதிகமான உயர்தர வைரங்களும் இந்த நகைகளில் பதிக்கப்பட்டுள்ளன.
டமாஸ் நிறுவனத்தின் ரங்கோலி, லெகசி, அனன்யா ஆகிய மூன்று நகைத் தொகுப்புகளில் இருந்து ஆபரணங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த ரங்கோலி உருவாக்கப்பட்டுள்ளது. 2 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட பகுதியில் இது அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
16 மணி நேர உழைப்பு
இந்த பிரம்மாண்டமான கலைப்படைப்பை 10 கைவினை கலைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு நகையையும் கவனமாக தேர்வு செய்து, அதன் வடிவம் மற்றும் அமைப்பு மாறாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ரங்கோலியை உருவாக்கியுள்ளனர். இதற்காக அவர்கள் தொடர்ந்து 16 மணி நேரம் செலவிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா கலந்துகொண்டு இந்த தங்க ரங்கோலியை திறந்து வைத்தார்.
என்னாது, ரூ.9 கோடி மதிப்பா?
இந்த ரங்கோலியின் மதிப்பு சுமார் ரூ.9 கோடி என சோஷியல் மீடியாவில் பேசப்படுகிறது. 6.5 கிலோ நகைகளின் மொத்த எடையை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலையில் கணக்கிடப்பட்ட மதிப்பீடுதான் இது. இருந்தாலும், நகைகளின் தங்கத் தூய்மை மற்றும் வைரங்களின் தனிப்பட்ட மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாததால், அதிகாரப்பூர்வமான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, தங்க நகைகளால் உருவாக்கப்பட்ட இந்த வித்தியாசமான ரங்கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்த நகைகளை பொதுமக்கள் பார்வைக்காக வணிக வளாகத்தில் வைத்திருப்பதையும் பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
சிலர் மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதாக கூறியுள்ளனர்... மிகவும் அழகாக செய்யப்பட்ட ரங்கோலி என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..!!


Click it and Unblock the Notifications
