For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளியால் தமிழுக்குக் கெளரவம்... 2வது பாட மொழியாகிறது

By Shankar
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் இயங்கி வரும் தமிழ் பள்ளிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பள்ளியான ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா ஹூஸ்டனில் நடைபெற்றது.

ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப் பள்ளி, அமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பள்ளியாகும். தமிழ்ப் பாடத்தை இரண்டாவது பாட மொழியாக டெக்சாஸ் ஹூஸ்டன் பள்ளிகளில் அங்கீகாரம் பெற்றுத் தரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அது நிறைவேறும் போது ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணாவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் இரண்டாவது பாட மொழியாக தமிழ்ப் பாடத்திற்கு மதிப்பெண்கள் (Credit Hours) வழங்கப்படும்.

Houston Tamil School's efforts to get official status for Tamil in US

ஐந்து கிளைகள்

ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி, மாநரத்தின் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளியாக மொத்தம் 350 மாணவர்களுக்குத் தமிழ் பயில வாய்ப்பளித்து வருகிறது. மாநகரத்தின் பகுதிகளான பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், வெஸ்ட்ஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் ஆகிய ஐந்து கிளைகளில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது

தமிழை பறை சாற்றும் ஆண்டுவிழா

மாணவர்கள், கற்ற தமிழை உற்றார் அறிய ஒவ்வொரு வருடமும் கல்வியாண்டின் இறுதியில் ஆண்டுவிழா கொண்டாடி வருகிறது. இவ்வருடம் சென்ற மே 30ஆம் தேதி சனிக்கிழமை ஹூஸ்டன் மாநகர மேற்குப் பகுதி மேல் நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக ஆண்டுவிழாவைக் கொண்டாடியது.

தமிழ்ச் சங்கமம்

இங்கு ஆண்டுவிழா என்பது ஐந்து கிளைப்பள்ளிகளின் தமிழ்ச் சங்கமம் என்றே சொல்லலாம். இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் பங்குபெற்று தத்தம் தமிழ்த்திறனை வெகுசிறப்பாக வெளிக்கொணர்ந்து ஆண்டுவிழா நிகழ்ச்சியை அலங்கரித்தனர். 500க்கும் மேலான பெற்றோர்களும் விருந்தினர்களும் வந்திருந்து விழாவினைக் கண்டு மகிழ்ந்தனர்.

ஆண்டு அறிக்கை

மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பள்ளித் தலைவர் முனைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றி விழாத் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

"பள்ளிக்கு உலகத்தரம் வாய்ந்த மதிப்பீட்டுக்குழு (Advanced) அங்கீகாரம் (Accreditation) பெற்றது மற்றும் டெக்சஸ் உயர் நிலைப் பள்ளிகளில் மாணாக்கர்கள் இரண்டாம் மொழிப் பாடமாக தமிழைப் பயின்று மதிப்பெண் (Credit) பெறும் வகையிலான பாடத் திட்டத்தினை பள்ளிப் பாடக்குழு திறம்பட தயாரித்து வருதல்" போன்றவற்றை குறிப்பிட்டார். தொடர்ந்து செயலாளர்.

ஜெகன் ஆண்டறிக்கை வாசித்தார், பள்ளி முதல்வர்கள் அவரவர் பள்ளி குறித்து சிற்றுரை ஆற்றினார்கள், பொருளாளர் வெங்கட் நிதிநிலை அறிக்கை வெளியிட்டார்.

தங்கத் தமிழனடா

பின்னர் இளநிலை முதல் நடுநிலை வரையிலான அனைத்து வகுப்புக் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக திருக்குறள், ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள், நடனம் (செம்மொழியாம் தமிழ்மொழி, கும்மி ஆட்டம்), பேச்சு (உடல் உறுப்புகள்), நாடகம் (மச்சான் பிடிச்ச கொழுக்கட்டை, மறைந்த தமிழகத்தலைவர்கள் இன்றுவந்தால், தங்கத் தமிழன்டா, ஐவகை நிலங்கள், குரு சிஷ்யன், காலச்சக்கரம்) என பல வகைகளிலும் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்தினர்.

தலை நிமிர்ந்து நில்லடா

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவன இயக்குநர்கள்.விசாலாட்சி வேலு, மற்றும்.வேலு ராமன் வருகை தந்திருந்து சிறப்புரை நிகழ்த்தினர். அவர்களது உரையில் "தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்பதனை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தால் தமிழ் தலைமுறைகள் பல தாண்டி என்றும் நிலைத்திருக்கும் என்றனர். மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பேச்சு அமைந்திருந்தது.

இணைச் செயலாளர் பாலா பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள் பலரையும் மேடைக்கு அழைக்க, அவர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

அழகுத் தமிழில் ஆறுமணி நேர விழா

அடுத்ததாக தமிழ்த்திறன் போட்டி, வகுப்புத்தேர்வுகளில் முதன்மை இடம்பெற்ற அனைத்துப் பள்ளி மாணாக்கர்கள் அனைவருக்கும் விருதுகளை அவரவர் வகுப்பு ஆசிரிய-ஆசிரியைகள் வழங்கி மாணாக்கர்களை மகிழ்வித்தனர். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் ஜீவா வேலுமணி நன்றியுரை வழங்க, அறுசுவை உணவுடன் விழா நிறைவடைந்தது.

பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரிந்தாலே போதும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமெரிக்கப் தமிழ்ப் பள்ளிகள் தமிழ் மொழியை அமெரிக்கப் பள்ளிகளில் இரண்டாம் மொழியாக அங்கீகாரம் பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் போற்றத் தக்கதாகும்.

செய்தி: இர தினகர்

English summary
The Houston Tamil School is making serious efforts to get second language status to Tamil in US schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X