அதிர்ஷ்டம் இருந்தா கூரைய பிச்சுகிட்டில்ல.. பிரிட்ஜை திறந்தாலும் பணம் கொட்டும் பாஸ்!
தென் கொரிய நாட்டில் ஆன்லைன் மூலம் வாங்கிய குளிர்சாதன பெட்டியில் ரூ.96 லட்சம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சியோல்: தென் கொரிய நாட்டில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டியில் (Fridge) ரூ.96 லட்சம் ரொக்கப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரம் நல்லா இருந்தா பணம் கூரையைப் பிரித்துக்கொண்டு கொட்டும் என்பார்கள். ஆனால் தென் கொரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கோ தான் வாங்கிய குளிர்சாதன பெட்டி மூலம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தென் கொரியாவின் ஜேஜூ தீவு பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 6ம் தேதி ஆன்லைன் மூலம் கிம்சி குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கினார். வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ் இல்லை இது. கடைகளில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ் மாடல் இது.

கட்டுக்கட்டாக பணம்
பிரிட்ஜை வாங்கிய அவர், அதனை திறந்து பார்த்தபோது ஆச்சரியமும், அதிர்ச்சியும் காத்திருந்தது. காரணம் அந்த பிரிட்ஜின் மேல் பகுதியில் கட்டுக்கட்டாக பணம் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் மொத்தம் ₩150755424 தென் கொரிய பணம் இருந்தது. அதாவது இந்திய மதிப்புபடி ரூ.96 லட்சம்.

வழக்குப்பதிவு
பிரிட்ஜில் இருந்த பணத்தை பார்த்து பதறிப்போன அந்த நேர்மையாளர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்தவுடன் அந்த பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் அந்த உத்தமபுத்திரன். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
தென் கொரிய சட்டத்தின்படி, ஒருவர் பணத்தையோ பொருளையோ கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்தால் முதலில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் பணத்தின் சொந்தக்காரர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை எனில் அந்த பணம் கண்டெடுத்தவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்படும். அந்த பணத்திற்கு 22 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது.

குற்றப்பின்னணி
ஒருவேளை பணத்தின் உரியாமையாளர் குறித்து தெரியவந்தாலும், மொத்த தொகையில் இருந்து ஒரு பகுதி கண்டெடுத்தவருக்கு சன்மானமாக வழங்கப்படும். ஒருவேளை அந்த பணத்திற்கு குற்றப்பின்னணி இருப்பது தெரியவந்தால், இருவரிடமும் பணம் ஒப்படைக்கப்படமாட்டாது. இது அந்த நாட்டு நடைமுறை.

யாருக்கு அதிர்ஷ்டம்?
குளிர்சாதன பெட்டியை ஆன்லைனில் விற்பனை செய்த வியாபாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பணத்தை என்ன செய்வது என்பது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என..!












Click it and Unblock the Notifications