மாயமான மலேசிய விமானத்தில் 'பவர்கட்': யாராவது கடத்தி இருக்க வாய்ப்பு அதிகம்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் திடீர் என்று மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது அதை யாராவது கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானத்தை தேடிய மலேசியா அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

பாகம்
விமானத்தை 26 நாடுகள் தேடி வரும் போதிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் கடலில் தான் விழுந்ததா என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது.

செயற்கைக்கோள்
மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பி 90 நிமிடங்கள் கழித்து அதில் இருந்து செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி நடைபெற்றுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. விமானம் நடுவானில் இருக்கையில் இவ்வாறு செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள முயல்வது வழக்கமானது அல்ல என்று ஆஸ்திரேலியா மேலும் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு
விமானம் செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயன்ற நேரம், சூழலை பார்க்கையில் அதில் திடீர் என்று மின்வினியோகம் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஹேண்ட்ஷேக்
செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள அனுமதி கேட்பதற்கு பெயர் ஹேண்ட்ஷேக். விமானத்தில் மின்சாரம் இல்லாததால் தான் இப்படி அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடத்தல்
விமானத்தில் மின் வினியோகம் இல்லாமல் இருந்திருக்கிறது என்றால் அதை யாரோ கடத்த முயன்றபோது தான் நடந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விமான போக்குவரத்து நிபுணரான பீட்டர் மாரோஸ்கி தெரிவித்துள்ளார்.

பேட்டரி
விமானத்தை கடத்த நினைப்பவர்கள் அதில் மின்வெட்டை ஏற்படுத்த பேட்டரி கன்ட்ரோல் ஸ்விட்சை திறந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் எனிஜினை தவிர பிறவற்றுக்கு மின்சாரம் செல்லாது என்று பீ்ட்டர் தெரிவித்தார்.

என்ஜின்
என்ஜினில் சிறிய கம்ப்யூட்டர் இருக்கும். கியர்பாக்ஸில் இருக்கும் ஜெனரேட்டர் மூலம் என்ஜினிக்கு பவர் கிடைக்கும் என்றார் பீட்டர்.

அறிவாளி
விமானத்தில் மின்வெட்டை ஏற்படுத்திவிட்டு மீண்டும் மின் வினியோகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதை செய்ய விமானம் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான ஒரு நபர் அல்லது விமானியால் மட்டுமே முடியும் என்று பீட்டர் கூறினார்.

கேப்டன்
விமானம் கடத்தப்பட்டிருந்தால் அதன் கேப்டன் ஜாஹரி அகமது தான் காரணமாக இருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.