• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அகிரா குரோசேவாவின் கல்லறையை முத்தமிட்டு வணங்கிய மிஷ்கின்!

By Shankar
|

டோக்கியோ: மறைந்த இயக்குநர் அகிரா குரோசேவாவின் கல்லறையை முத்தமிட்டு வணங்கினார் இயக்குநர் மிஷ்கின்.

ஜப்பான்-டோக்கியோ தமிழர்களின் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள, டோக்கியோ சென்றிருந்த இயக்குநர் மிஷ்கின், மறைந்த இயக்குநர் அகிரா குரோசோவா-வின் கல்லறையை நேரில் கண்டு நெகிழ்ந்துள்ளார்.

Mysskin pays tribute to Akira Kurosawa

அதுபற்றி வலைத்தளத்தில் செந்தில்குமார் என்பவர் செய்துள்ள பதிவு:

டோக்கியோ தமிழர்களின் 25-வது ஆண்டு பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு வந்திறங்கிய உடன், இயக்குநர் மிஷ்கின், தான் பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலைக் கொடுத்தார். எதிர்பார்த்தது போலவே இரண்டு விஷயங்கள். குரோசேவாவின் கல்லறை முதலிடத்தில் இருந்தது. வழக்கமாக வரும் விருந்தினர்கள் பார்க்க விரும்பும் எந்த இடமும் அந்தப் பட்டியலில் இல்லை.

நேற்று மாலை (25-ஜனவரி) மூன்று மணி அளவில் தோக்கியோவிலிருந்து அகிரா குரோசேவாவின் கல்லறை அமைந்திருக்கும் காமகுராவை நோக்கி காரில் பயணித்தோம். காமகுரா இன்று கடலோரத்தில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். ஆனால் 1192-ல் மினாமோத்தோ யோரிதோமோ (Minamoto Yoritomo) ஜப்பானை ஆண்டபோது காமகுராதான் தலைநகர்.

Mysskin pays tribute to Akira Kurosawa
Mysskin pays tribute to Akira Kurosawa

இங்கு குளிர்காலமாகையால், சீக்கிரமே இருட்டிவிடும். நாம் அங்குச் செல்லும்போது வெளிச்சமிருக்குமா? என்று கேட்டபடியே இருந்தார் மிஷ்கின். அந்தப் பதற்றமும் பரவசமும் கலந்த உணர்வுநிலை எங்களையும் தொற்றிக் கொள்ள, கார் அதிவேகத்தில் விரைந்தது. காமகுராவை அடைந்தபோது மாலை சூரியனின் பொன்னொளி மலைகளில் ஒரு பக்கம் ஒளிர, ரம்மியமான சூழ்நிலையில், அகிரா குராசவாவின் கல்லறை அமைந்திருக்கும் அன்யோ இன் (An'yo-in) புத்த கோவிலைச் சென்றடைந்தோம்.

கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு கல்லறையாக பெயர்களை படித்தபடி குரோசேவாவின் கல்லறையைத் தேடினோம். வரிசையாக பல கல்லறைகள் மலையின் ஓரம் அமைந்திருக்க, ஒரு சிறு குன்றை நோக்கி படிக்கட்டுகள் மேலே சென்றன. குன்றின் மேலே ஏறி வலதுபக்கம் நடந்தால், இறுதியாக மலையை நோக்கியபடி உறங்குகிறார் உலக சினிமாவின் சாமுராய் குரோசேவா.

காஞ்சியை (Kanji) படித்து குராசவாவின் கல்லறை இதுதான் என்று சொல்வதற்காக எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மிஷ்கினைத் தேடினால், அவரை காணவில்லை. ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, கல்லறையை சுத்தம் செய்யத் தொடங்கினார். உச்சக்கட்ட பரவசத்துடன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்லில் தண்ணீரை ஊற்றி துடைத்தெடுத்தார். மலைகளின் மேல் படர்ந்திருந்த பூக்களைப் பறித்து வந்து வரிசையாக அடுக்கினார். இருகைகளையும் விரித்தபடி காற்றில் குரோசேவாவை அணைத்துக் கொண்டார். ஓ மை மாஸ்டர் என்று அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தன. தனது ஆசிரியனை, உலக அன்பை எல்லாம் கொட்டி தனது தேவதையை நேசிக்கும் ஒரு காதலனை போல நேசிப்பதை பார்த்து நெகிழ்ந்துப் போய் நின்றேன்.

Mysskin pays tribute to Akira Kurosawa

அவர் மனதை புரிந்துகொண்ட நண்பர் தியாககுறிஞ்சி, எங்கேயோ ஓடிசென்று, பூங்கொத்துகளுடன், ஒரு பாட்டில் ஷாக்கேயை கொண்டு வந்தார். அவற்றை தனது மூதாதையருக்கு படைக்கும் ஒரு பேரனைப் போல் பயபக்தியுடன் குரோசேவாவின் காலடியில் வைத்தார். கண்களிலிருந்து நீர் வழிந்தபடி இருந்தது. என்னுடைய ஜப்பான் புனித யாத்திரை நிறைவடைந்தது என்றார். கல்லறையின் மேல் கவிழ்ந்து முத்தங்களை பொழிந்தார். திருக்காளத்தி காட்டில், கண்ணப்ப நாயனார், சிவனை எப்படி வழிபட்டிருப்பார் என்பது காட்சிகளாக அந்த காமகுரா மலையோரம் வந்துபோனது.

ஏறக்குறைய அதே பித்த நிலைக்கு நானும் வந்திருந்தேன். வாழ்க்கை முழுவதும் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு தரிசனத்தை எனக்கு வழங்கியபடியே இருக்கும் காவியங்களை தந்த குரோசாேவா அங்கு நேரில் நிற்பதுபோன்ற சிலிர்ப்பு என் முதுகெலும்பில் ஊடுருவியது. கல்லறையை முத்தமிடுகையில் கதறி அழுதேன். ஐ அண்டர்ஸ்டான்ட் யூ செந்தில் என்ற மிஷ்கினை கட்டி தழுவிக் கொண்டேன். கொல்லன் தெருவில் ஊசி விற்கும் ஒரு பித்தனைப் போல, மிஷ்கினிடம் இகிருவிலிருந்தும், ரெட் பியர்டில் இருந்தும் காட்சிகளை சொல்லிக் கொண்டே இருந்தேன்.

லெட் அஸ் டிரிங்க் என்றார் மிஷ்கின். அங்கேயே ஷாக்கேயை திறந்து குரோசேவா-வின் காலடியில் அமர்ந்து குடித்தோம். செவன் சாமூராய் கிளைமேக்ஸ் மியூசிக் வேண்டும் செந்தில் என்றார். யூ டியூபிலிருந்து ஒலிக்கவிட்டேன். வாழ்வின் அற்புதமான ஒரு தருணம்.. அந்த தருணத்தை நீட்டியபடியே அமர்ந்திருந்தோம். வாழ்க்கை என்பது, இதைப்போல் ஒரு சில அற்புத தருணங்கள் அல்லாமல் வேறு என்ன?

காமகுராவுக்கு ஒன்றாக வந்த நடிகர் அபிஷேக், நண்பர் தியாக குறிஞ்சி என அனைவரும் அந்த அற்புதத்தை அனுபவித்தனர். அந்த அனுபவத்தை நண்பர்களுக்கும் கடத்த விரும்பிய மிஷ்கின் அங்கிருந்தபடியே தொலைபேசியில் அழைத்தார். வெற்றிமாறன், எஸ்.வி.ராஜதுரை, ஷாஜி, ராகுலன், இயக்குனர் ராம் என அழைத்த அனைவரும் மறுமுனையில் நெகிழ்வதை உணர முடிந்தது. என்னுடைய வாத்தியாரை பார்க்க என்னவிட்டு நீங்கள் மட்டும் சென்று விட்டீர்களே, என்றார் வெற்றிமாறன்.

வெகுநேரமாகிவிட்டதால் பக்கத்தில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர் என்ன நடக்கிறது என்று புரியாமல் மேலே வந்து பார்த்தார். எங்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் சிரித்தபடி கீழே சென்றுவிட்டார். நன்கு இருட்டிவிட்டதால் செல்லலாம் மிஷ்கின் என்றேன். தனது பர்சிலிருந்து இந்திய நாணயங்களை எடுத்து கல்லறையின் மேல் வைத்தார். தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு பேப்பரை உருவி, கல்லறையில் அமர்ந்து குருவுக்கான தனது பிரமாணங்களை எழுதினார். செவன் சாமூராயின் தீம் மியூசிக் ஒலிக்க சாமுராய்களைப் போல ஒவ்வொருவராக கீழே இறங்கினோம்.

காரில் ஏறி கொஞ்சநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை வெளியே கொண்டுவர எனக்கு ராஜா வேண்டுமே என்றார். "ஆனந்தராகம் கேட்கும் காலம்..." ஒலிக்க தொடங்கியது. மெல்ல டோக்கியோவை நோக்கி கார் விரைய தொடங்க, கமாகுரா கடல் அலைகள் எங்களை நோக்கி வந்து, வந்து திரும்பிகொண்டிருந்தது என்று உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
In his recent visit to Japan, Director Mysskin paid his tribute to late legend director Akira Kurosawa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more