ரொமாண்டிக்காக காதலை சொல்ல.. ஹோட்டலையே வாடகைக்கு எடுத்த நைஜீரிய இளவரசர்.. இது ஒரு மாதிரி கஜினி கதை!
நைரோபி: நைஜீரிய இளவரசர் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா தனது வருங்கால மனைவியை சந்திப்பதற்காக ஒரு முழு உணவகத்தையே வாடகைக்கு எடுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
நைஜீரியாவின் இளவரசராக இருப்பவர் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா. அவரது மனைவியின் பெயர் கெய்ஷா. இவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஒரு அலுவல் வேலையாக சென்றிருக்கிறார் நைஜீரிய இளவரசர் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா. அப்போது கெய்ஷாவை அவர் சந்தித்திருக்கிறார். முதல் பார்வையிலேயே கெய்ஷா மீது காதலில் விழுந்துவிட்டார் இளவரசர்.

ரோஜா அலங்காரம்
இதையடுத்து தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டு, வருங்கால மனைவியை சந்திப்பதற்காக அதிக பொருட்செலவில் ஒரு ஓட்டல் முழுவதையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார். பின்னர் அந்த ஓட்டலை ரோஜா மலர்களால் அலங்கரித்து, காதல் ரசம் சொட்டும் அளவிற்கு ரொமாண்டிக்காக அலங்கரித்து, கெய்ஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்திருக்கிறார் இளவரசர்.

கஜினி படம்
கெய்ஷாவும் இளவரசரின் காதலை ஏற்றுக்கொண்டார். ஆனால் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா யார் என்பது கெய்ஷாவுக்கு தெரியாது. கிட்டத்தட்ட கஜினி படத்தில் வரும் சூர்யா, அசின் காதல் எபிசோட் போல இரண்டு வருடங்கள் சென்றிருக்கிறது.

இளவரசி
இந்த சூழலில் ஒருநாள் அடெகுன்லே அடேபாயோ ஓமிலானாவின் தாயை கெய்ஷா சந்தித்தார். அப்போது அவர் கெய்ஷாவை இளவரசி என அழைத்திருக்கிறார். எல்லா தாயும் தன்னுடைய மகளை இளவரசி என அழைப்பது போலவே அடெகுன்லே அடேபாயோ ஓமிலானாவின் தாயும் தன்னை அழைப்பதாக நினைத்திருக்கிறார் கெய்ஷா.

திருமணம்
பின்னர் தான் கெய்ஷாவுக்கு அடெகுன்லே அடேபாயோ ஓமிலானா யார் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. சந்தோஷத்தில் துள்ளி குதித்த கெய்ஷா, உடனடியாக அடெகுன்லே அடேபாயோ ஓமிலானாவை கைப்பிடித்துவிட்டார். தற்போதும் காதல் தம்பதிகளாக மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர் இருவரும்.

திருமண புதுப்பித்த நிகழ்வு
விரைவில் மீண்டும் இருவரும் புதிதாக ஒரு திருமண விழாவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். இவர்களது திருமண புதுப்பித்த நிகழ்வு நைஜீரியாவுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் நடக்க இருக்கிறது. அந்தத் திருமணத்தையும் விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.