
திடீரென திரண்ட 500 பேர்.! காலிஸ்தான் ஜிந்தாபாத் vs ஜெய் ஸ்ரீராம்..! மாறி மாறி எழுந்த கோஷம்! பரபரப்பு
ஒட்டாவா: கனடா நாட்டில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது திடீரென பதற்றமான ஒரு சூழல் உருவானது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உலகெங்கும் தீபாவளி பண்டிகை கடந்த அக். 24ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இந்தாண்டு மிகவும் சிறப்பாகத் தீபாவளி கொண்டாடப்பட்டது.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர். அமெரிக்கா, கனடா போன்ற இந்துக்கள் கணிசமாக வாழும் நாடுகளிலும் கொண்டாட்டம் கலை கட்டியது.
தீபாவளி கூட்டத்தில் நாச வேலைக்கு சதி?.. போலீஸாரை பார்த்தும் காரை வெடிக்க செய்தாரா முபின்!

கனடா
கனடா நாட்டில் இந்தியர்களின் மக்கள் தொகை மிகவும் அதிகம். இதனால் அங்கு இந்து பண்டிகைகள் பொதுவாகவே விமர்சையாக கொண்டாடப்படும். அதேநேரம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் உள்ளனர். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை என்பதால் வெளிப்படையாகவே காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள்
மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் அவர்கள் பிரிவினை கோஷங்களை எழுப்புவதையும் வழக்கமாக வைத்து உள்ளனர். இப்போது தீபாவளி கொண்டாட்டத்தின் போதும் அதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அங்கு பிராம்ப்டன் பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வெஸ்ட்வுட் மாலில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது கொடியேற்றும் விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திரண்ட 500 பேர்
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அங்குள்ள ஒரு மால் பார்கிங்கில் சுமார் 500 பேர் வரை ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். மஞ்சள் கலர் காலிஸ்தான் கொடியை அசைத்த பிரிவினைவாத குழுவினர், காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை எழுப்பினர். எதிர்த் தரப்பில் இந்திய மூவர்ணக் கொடியுடன் இருந்த மக்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுகின்றனர்.

நடவடிக்கை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.. மேலும், பதற்றம் காரணமாக அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாக்கெடுப்பு திட்டம்
காலிஸ்தான் தொடர்பாகக் கனடாவில் வரும் நவம்பர் 6ஆம் தேதி பொது வாக்கெடுப்பை நடத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்தியாவில் கடை செய்யப்பட்டுள்ள சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற குழுவால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்கெடுப்பு இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குச் சவாலாக அமையும் என்று இந்தியத் தூதரக அதிகாரி கனடா அதிகாரிக்குக் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா கோரிக்கை
இந்த வாக்கெடுப்பிற்கு அனுமதி தரக் கூடாது என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நமது நட்பு நாட்டில் இதுபோன்ற ஒன்று நடைபெறுவது துரதிருஷ்டவசமானது. இது குறித்து கனடாவுக்குப் பல முறைகளில் தெரிவித்து உள்ளோம். இது போன்ற நடவடிக்கை இருக்கக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்குச் செல்லும் இந்தியர்களுக்கு எந்தளவுக்கு ஆபத்து இருக்கும் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.