“உன் நாட்டுக்கு திரும்பி போ” என்று கூறி.. பிரிட்டனில் சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
லண்டன்: பிரிட்டனில் "உன் நாட்டுக்கே திரும்பி போ" என்று கூறி, சீக்கிய பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனின் ஓல்ட்பரி நகர பூங்காவில், காலை 8.30 மணிக்கு பட்டப்பகலில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை, இனவெறி தூண்டுதலால் இந்த குற்றம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும், புலம்பெயர் மக்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சமீப காலமாக இது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பேரணியே நடந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது பிரிட்டனில், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் சீக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின் உச்சமாக இருக்கிறது.
பிரிட்டனில் பிறந்து வளர்ந்த, 20 வயது சீக்கிய இளம்பெண், இன்று காலை ஓல்ட்பரி நகர பூங்காவுக்கு சென்றிருக்கிறார். அங்கு பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு வெள்ளையின நபர்களால் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் சில அடையாளங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர், தலைமுடி ஒட்ட வெட்டியவாறும், அடர் நிற ஸ்வெட்ஷர்ட் மற்றும் கையுறைகளுடனும் பருமனான உடலமைப்பு கொண்டவராகவும் இருந்திருக்கிறார். மற்றொருவர் சில்வர் ஜிப் வைத்த சாம்பல் நிற மேலாடை அணிந்திருந்திருக்கிறார். சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி, டாஷ்கேம் அல்லது மொபைல் ஃபுட்டேஜ்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "இது ஒரு பயங்கரமான தாக்குதல். அந்தப் பகுதியில் இரு ஆண்களைப் பார்த்தவர்கள் அல்லது சிசிடிவி, டாஷ்கேம் காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
பிரிட்டனில் சமீப காலமாக இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சீக்கிய சமூகம் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பியான, பிரீத் கவுர் கில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
"இது தீவிர வன்முறை மற்றும் இனவெறியின் வெளிப்பாடு. குற்றவாளிகள் இங்குதான் இருக்க வேண்டும். ஓல்ட்பரியில் மட்டுமல்ல பிரிட்டனின் எந்த பகுதியிலும், இனவெறிக்கும், பெண்கள் மீதான வன்முறைக்கும் இடமில்லை. சீக்கிய சமூகத்திற்கு நீதி கிடைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் காவல் துறையுடன் இணைந்து செயல்படுவேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications