ஆள்கடத்தல்... தாய்லாந்து ராணுவ ஜெனரலுக்கு 27 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாங்காங்: ரோஹிங்கியா முஸ்லீம்கள் மற்றும் பங்களாதேசிகள் கடல் வழியாக கடத்தப்பட்டது தொடர்பாக நடந்த வழக்கில், முன்னாள் ராணுவ ஜெனரல் மனஸ் கோங்பனுக்கு தாய்லாந்து நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தாய்லாந்து-மலேசியா எல்லைப் பகுதியிலிருந்த காட்டு முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான அகதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இவ்விசாரணை வீரியம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தப்பி பிழைத்த அகதிகள், முகாம்களில் பணத்திற்காக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

Thailand Former military general jailed for human trafficking at mass trial

இது தொடர்பாக விசாரணை நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி பவீன் பொங்சிரின், ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்த செல்வாக்கு மிகுந்த நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார்.

இவ்வழக்கில் ஆட்கடத்தல்காரர்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 103 சந்தேக நபர்கள் இருந்தனர். இதில் பலருக்கு தற்போது 4 ஆண்டுகள் முதல் 94 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ ஜெனரல் மனஸ் கோங்பனுக்கு தாய்லாந்து நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் முன்னாள் மேயர் பஞ்சோங் என்பவருக்கு 78 ஆண்டுகளும் முன்னாள் மாகாண தலைவர் பஜ்ஜூபன் என்பவருக்கு 75 ஆண்டுகளும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு ராணுவ ஆட்சி நடக்கக்கூடிய தாய்லாந்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆட்கடத்தலுக்கு எதிரான நகர்வில் திருப்புமுனைமிக்க தீர்ப்பாகவும் இது பார்க்கப்படுகின்றது.

"ஆட்கடத்தலில் பலவிதமான ஆட்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டிலுள்ள ராணுவத்தினர் அனைவரையும் ஒரே விதமாக சித்தரிக்க வேண்டாம்" என தாய்லாந்து பிரதமரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான பிரயுத் சன்- ஒச்சா தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தென் தாய்லாந்து கடல் பகுதியினூடாக ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்திருந்தனர். இதையடுத்து எழுந்த சர்வதேச அழுத்தம் காரணமாக தாய்லாந்து தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former military general of Thailand held in human trafficking. He got jail punishment for 27 years.
Please Wait while comments are loading...