போரை ஆரம்பிக்க தயார் நிலையில் ரஷ்ய வீரர்கள்.. உக்ரைன் எல்லையில் இரட்டிப்பான ரஷ்ய ராணுவம்! பரபர தகவல்
வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுக்கும்பட்சத்தில், அது கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

உக்ரைன்
ஏற்கனவே, போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென உயரத் தொடங்கிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் கூட, அதன் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாகவே உள்ளது. இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று அமெரிக்க அதிபர் பைடன் கூட எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மற்றொரு சமிக்ஞை
இந்தச் சூழலில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யப் படைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது தாக்குதலுக்குத் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா மீது படையெடுத்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது, வெளியிட்ட பிரசார வீடியோக்களை போலவே இப்போதும் ரஷ்யா மீண்டும் பிரசார வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. இது போருக்கான மற்றொரு சமிக்ஞை என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தாக்குதலுக்கு தயார் நிலை
உக்ரைனின் எல்லை அருகே ரஷ்யா 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களைக் குவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை முதலே உக்ரைன் எல்லையில் அமெரிக்கப் படைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "சுமார் 40 முதல் 50 சதவீத ரஷ்ய ராணுவம் போர் தொடுக்கத் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் ரஷ்யா போர் காலங்களில் இருப்பதைப் போலத் தனது ராணுவத்தை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது" என்றார்.

இரண்டு மடங்கு ராணுவம்
உக்ரைன் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் Tactical assembly pointsகளில் ரஷ்யா தனது ராணுவத்தை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற இடங்களில் ரஷ்யா சுமார் 125 பட்டாலியன் குழுக்களை நிலைநிறுத்தி உள்ளது. வழக்கமான காலங்களில் 60 பட்டாலியன் குழுக்கள் மட்டுமே இங்கு இருக்கும். கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட தொடங்கிய போது 80 பட்டாலியன் குழுக்கள் குவிக்கப்பட்ட நிலையில், இப்போது அது கிட்டதட்ட இரட்டிப்பாகியுள்ளது எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக வெளியான சாட்டிலைட் படங்களிலும் அப்படியே பதிவாகியுள்ளது.

ரஷ்யா திட்டம்
கடந்த சில வாரங்களாகவே உக்ரைனின் தென்கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதுவும் கூட ரஷ்யாவின் ஒரு வகையிலான யுக்தி தான் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது தொடுக்கத் தேவையான காரணத்தை உருவாக்க ரஷ்யாவே போலியாக ஒரு சம்பவத்தைத் தூண்டிவிடலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், "புதினுக்கு இப்போது பல ஆப்ஷன்கள் உள்ளன. அவர் நினைத்தால் குறுகிய காலத்தில் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட முடியும். ரஷ்யா வெற்று மிரட்டல்களை விடுத்து வருவதாக நான் கருதவில்லை. படையெடுப்பை வெற்றிகரமாக நடத்தத் தேவையான நடவடிக்கைகளை ரஷ்யாவும் புதினும் எடுத்து வருகின்றனர். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா நிலைப்பாடு
மேற்குலக நாடுகள் தொடர்ந்து இப்படிக் கூறி வந்தாலும் கூட உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றே ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேநேரம் உக்ரைன் நாட்டை ஒருபோதும் நேட்டோவில் சேரக்கூடாது என்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதற்கு மேற்குலக நாடுகள் மறுத்து வருகிறது.
Recommended Video

ரஷ்யா அச்சம் ஏன்
சோவியத் ஒன்றியத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யா, உக்ரைன் புவியியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் நாடாக உக்ரைன் இருப்பதால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் அது தனக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றே ரஷ்ய அதிபர் புதின் கருதுகிறார்.












Click it and Unblock the Notifications