சொந்தக்காரனை நம்பாதீங்க.. ஷேக் ஹசீனாவின் முதுகில் குத்திய ராணுவ தளபதி! இருவருக்கும் பந்தம் இதுதான்
டாக்கா: நம் ஊர்களில் சொந்தக்காரனை நம்பாதீங்க என்று பொதுவாக சொல்வது உண்டு. அப்படித்தான் தற்போது வங்கதேச பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரது ராஜினாமா முடிவை அறிவித்து இடைக்கால அரசை ‛நாங்கள்' அமைப்போம் என்று கூறிய வங்தேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானும், ஷேக் ஹசீனாவும் உறவினர்கள் என்பது உங்களுக் தெரியுமா? இருவருக்கும் இடையே இருக்கும் பந்தம் பற்றிய விபரம் வருமாறு:
வங்கதேச நாடு உருவாக உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று முன்தினம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இடஒதுக்கீடு ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டம் படிப்படியாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாறியது. டாக்காவில் பிரதமர் மாளிகையை நோக்கி மாணவர்கள் பெருந்திரளாக வருவதை அறிந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இங்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்றால் அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான்.
இவர் தான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ‛‛ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை
ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது உரைக்கு பிறகு, நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்" என்று பேசினார். தற்போது இவர் தலைமையில் தான் வங்கதேசம் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா பின்னணியில் வாக்கர் உஸ் ஜமான் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வாக்கர் உஸ் ஜமான் நினைத்திருந்தால் ஷேக் ஹசீனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க கூடுதல் ராணுவத்தை களமிறக்கி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. மேலும் வங்கதேச நாளிதழ்களின் வெளியான செய்தியை கவனித்தால் நேரக்கெடு விதித்து வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவிடம் ராஜினாமா செய்ய கூறியுள்ளார். அதாவது இன்னும் 45 நிமிடம் தான் டைம். அதற்குள் ராஜினாமா செய்து விட்டு வேறு நாட்டுக்கு செல்லுங்கள். உங்களை ராணுவ ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கிறேன்'' என கூறியுள்ளார். அதோடு ஷேக் ஹசீனாவை ராஜினாமாவை தொடர்ந்து ஊழல் வழக்கில் சிறை வைக்கப்பட்ட பிஎன்பி கட்சியின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை விடுவித்துள்ளார். இதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.
ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டி விட்டு மீண்டும் பிஎன்பி கட்சியின் ஆட்சியை கொண்டு வர வாக்கர் உஸ் ஜமான் விரும்புகிறாரா? என்ற கேள்வியை தான் இந்த நடவடிக்கை எழுப்புகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவும், அந்த நாட்டின் ராணுவ தளபதியான வாக்கர் உஸ் ஜமானும் உறவினர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக முதல் முறையாக கடந்த 1996ம் ஆண்டில் பதவியேற்றார். அவர் 2001ம் ஆண்டு வரை பிரதமராக செயல்பட்டார். இந்த வேளையில் வங்கதேச ராணுவ தளபதியாக இருந்தவர் முஸ்தபிஷூர் ரஹ்மான். இவர் 1997 ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி முதல் 2000ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வரை 3 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார்.
இந்த முஸ்தபிஷூர் ரஹ்மானும், ஷேக் ஹசீனாவும் உறவினர்கள். அதாவது ஷேக் ஹசீனாவின் தாய் ஷேக் ஃபாசிலதுன்னேசா முஜிப். இவரது சகோதரியை தான் முஸ்தபிஷூர் ரஹ்மான் திருமணம் செய்தார். இதனால் ஷேக் ஹசீனாவுக்கு முஸ்தபிஷூர் ரஹ்மான் சித்தப்பா அல்லது பெரியப்பா முறையாகும். இந்த முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு மொத்தம் 2 மகள்கள்.இதில் ஒரு மகளின் பெயர் பேகம் சரஹ்னாஸ் கமலிகா ரஹ்மான். இவரை தான் தற்போதைய ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் திருமணம் செய்துள்ளார்.
இன்னும் புரியும் படி எளிமையாக ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் ஷேக் ஹசீனாவின் தாயின் சகோதரி மகளை தான் வாக்கர் உஸ் ஜமான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஷேக் ஹசீனாவும், வாக்கர் உஸ் ஜமானின் மனைவியும் Cousin ஆவார்கள். மேலும் உறவினர் என்பதாலே ஷேக் ஹசீனா, வாக்கர் உஸ் ஜமானுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வந்துள்ளார். மேலும் வாக்கர் உஸ் ஜமானின் பின்னணியை பார்த்தோமேயானால் ,58 வயதான அவர் கடந்த ஜூன் 23ம் தேதி தான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்று ஒரே மாதத்தில் அவர் இப்போது ஆட்சியை அமைக்கிறார். இவர் ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமாக பணி செய்தவர். ராணுவ நடவடிக்கைகள், உளவுத்துறை நடவடிக்கை, ராணுவ பட்ஜெட் என பல விஷயங்களைக் கவனித்து வந்தார்.
குறிப்பாக பிரதமர் அலுவலகத்தின் கீழ் ஆயுதப் படைப் பிரிவிலும் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வரும் வாக்கர் உஸ் ஜமான் ஷேக் ஹசீனாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனால் தான் ஷேக் ஹசீனா அவரை ராணுவ தளபதியாக நியமித்தார். இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் எச்சரிக்கையை மீறிய ஷேக் ஹசீனா தற்போது வாக்கர் உஸ் ஜமானிடம் தனது பதவியை பறிகொடுத்து தந்தை ஷேக் உருவாக்கிய வங்கதேசத்தில் இருந்தே வெளியேறி உள்ளார் என்பது பெரிய சோகமாகும். முன்னதாக வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பதவிக்கு ஷேக் ஹசீனா நியமிக்க முடிவு செய்தபோது நட்பு ரீதியாக வேண்டாம் என்று இந்தியா எச்சரிக்கை செய்ததாகவும், ஆனாலும் ஷேக் ஹசீனா தனது உறவுக்காரர் என்ற நம்பிக்கையில் அவரை நியமனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில் ஷேக் ஹசீனா தனது உறவுக்காரர் என்பதாலேயே அவரை ராணுவ ஹெலிகாப்டரில் முன்கூட்டியே வாக்கர் உஸ் ஜமான் பாதுகாப்பாக இந்தியா அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வங்கதேசத்தில் நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது இப்படிப்பட்டட நல்ல எண்ணத்தில் வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவை இந்தியா அனுப்பி வைக்க வாய்ப்பில்லை என்று விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ஷேக் ஹசீனாவை பாதுகாக்க விரும்பினால் அவரை ராஜினாமா செய்ய வைக்காமல் சில நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அறிவுரை வழங்கி இருக்கலாம். மாறாக அவசரஅவசரமாக ராஜினாமா செய்ய வைத்து இந்தியாவுக்கு அனுப்பியதன் பின்னணியில் வாக்கர் உஸ் ஜமானின் சதி திட்டம் இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications