மோடி, மோடி.. ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உச்சரிக்கும் ஒருவார்த்தை.. "பவரை" காட்டும் இந்தியா.. பின்னணி!
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகள் பல ஆர்வமாக இருக்கின்றன.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிவைவை நெருங்கி உள்ளது. தலைநகருக்கு மேலே ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது.
அதேபோல் விமானம் மூலம் அதிகாலையில் இருந்து மீண்டும் குண்டு மழையை ரஷ்யா வீசி வருகிறது. இதனால் உக்ரைன் விரைவில் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியா
இந்த போர் விவகாரத்தில் நேற்று காலை வரை இந்திய தலையிடாமல் இருந்தது. உதாரணமாக ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் ரஷ்யாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துவிட்டனர். புடின் கையில் ரத்த கரை இருப்பதாக இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் கூறிவிட்டார். அதேபோல் சீனாவும் கூட ரஷ்யாவிற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டது. இன்னொரு பக்கம் இம்ரான் கானும் கூட மாஸ்கோ வரை சென்று ரஷ்யாவிற்கு ஆதரவான சிக்னல் கொடுத்தார்.

உக்ரைன் கோரிக்கை
ஆனால் இந்தியா இதில் பெரிதாக நிலைப்பாடு எடுக்காத நிலையில் உக்ரைன் இதை பற்றிய அதிருப்தியை வெளிபடுத்தி இருந்தது. இந்தியா இந்த போரில் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக புடினை அழைத்து பேச வேண்டும். எத்தனை தலைவர்கள் புடின் உடன் பேசுவார்கள், அதில் எத்தனை பேர் பேச்சை புடின் கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் பிரதமர் மோடி வலிமையானவர். அவர் சொன்னால் புடின் கேட்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்தார்.

பிடன் பேச்சு
ஒரு பக்கம் உக்ரைன் இப்படி கூற அமெரிக்க அதிபர் பிடனும் இந்தியாவுடன் இதை பற்றி பேசுவோம் என்று கூறி உள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் நிற்கிறது. அமெரிக்கா பக்கம் நிற்கிறதா என்ற கேள்விக்கு.. அதை பற்றி இன்று நாங்கள் இந்தியாவுடன் பேசுவோம். அதை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. எடுப்போம் என்று கூறினார். பிடன் இப்படி சொன்னது, இந்தியா எந்த அளவிற்கு ரஷ்யா - உக்ரைன் விவகாரத்திலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதை உணர்த்தி உள்ளது.

மோடி ஆலோசனை
இப்படிப்பட்ட நேரத்தில்தான் நேற்று பிரதமர் மோடி அவசர மீட்டிங் நடத்தினார். ஒரு போர் நடந்து கொண்டு இருக்கும் போது.. இந்திய அணி சேராமல் இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அதை பற்றிய அறிவிப்பையாவது வெளியிட வேண்டும். ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிடாத நிலையில்தான் பிரதமர் மோடி நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

ரஷ்யாவுடன் பேச்சு
இந்த அவசர ஆலோசனைக்கு பின்தான் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் செய்தார். இந்த போன் கால் சில நிமிடங்கள் நீடித்தது. அதில் ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். அதன்பின் போர் பற்றி ரஷ்யா கொடுத்த விளக்கத்திற்கு மரியாதையை நிமித்தமாக மோடி நன்றி தெரிவித்தார். பின்னர் போரை நிறுத்த வேண்டும் என்று புடினுக்கு மோடி நேரடி கோரிக்கை விடுத்தார். போரை நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று மோடி கோரிக்கை விடுத்தார்.

பிடனிடம் சொன்னது என்ன?
பிரதமர் மோடியின் இந்த உரை மிக முக்கியமாக காலகட்டத்தில் வந்துள்ளது. இதுவரை ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது. இதுவரை இந்த விஷயத்தில் இந்தியா வெயிட் அண்ட் வாட்ச் என்ற நிலைப்பாட்டில் வேடிக்கை மட்டுமே பார்த்தது. ஆனால் முதல்முறை பிரதமர் மோடி இதில் புடினிடம் பேசி இருக்கிறார். போரை நிறுத்த வேண்டும் என்று கூறியதன் மூலம், இந்தியா போருக்கு எதிரானது என்பதை உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது. அதேபோல் இதை பற்றி ரஷ்யாவிடம் பேசியதன் மூலம், ரஷ்யாவிற்கான ஒரு வித அழுத்தத்தை இந்தியா கொடுத்துள்ளது.

வெயிட் அண்ட் வாட்ச்
மேற்கு உலக நாடுகளுக்கும், நேட்டோவிற்கும் இந்தியா மீதான ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும். ஆனால் அதே சமயம் பிரதமர் மோடி மற்ற உக்ரைன், அமெரிக்கா நாட்டு தலைவர்களிடம் பேசாமல் புடினிடம் மட்டும் பேசி இருப்பது ஒரு விதமான அரசியல் நிலைப்பாடு போல பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பொக்ரான் சோதனையால் உலக நாடுகளின் பொருளாதார தடையின் போது கூட ரஷ்யாதான் இந்தியாவிற்கு உதவியது. அதேபோல் ரஷ்யாதான் இப்போதும் இந்தியாவிற்கு அதிக ஆயுதங்களை அனுப்புகிறது.

ரஷ்யா நம்புகிறது
ரஷ்யாவை நம்பித்தான் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா உள்ளது. இப்போதும் கூட எஸ்400 ஏவுகணை மறிப்பு சிஸ்டத்தை பெற இந்தியா காத்துக்கொண்டு இருக்கிறது. ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவு என்பது பல வருடம் பழையது. அதோடு இந்தியாவின் 70 சதவிகித பாதுகாப்பு சாதனங்கள், ராணுவ பொருட்கள் ரஷ்யாவிடம் இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவை இந்தியா பகைத்துக்கொள்ளாது. இதன் காரணமாகவே மோடி மற்ற அதிபர்களிடம் பேசாமல் ரஷ்யாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இந்தியா மத்தியில் உள்ளது
இனிமேல் பிடன், சோலன்ஸ்கி உள்ளிட்ட அமெரிக்க, உக்ரைன் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா என்று பல நாடுகள் இதில் இந்தியாவை சார்ந்து இருக்கிறது. இந்த நாடுகள் மோடி மோடி என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்தியா இந்த பிரச்சனையில் நடுநிலையில் உள்ளது. இந்தியா ரஷ்யா, அமெரிக்கா இரண்டிற்கும் நட்பான நாடு. இரண்டிற்கும் நடுவில் உள்ள நாடு. சீனாவோ, பாகிஸ்தானோ, ஆஸ்திரேலியாவோ அப்படி இல்லை.

பொதுவான நாடு
இந்தியா பொதுவான நாடு. இந்தியாவின் பவரே சமாதானம் செய்வதுதான். நடுநிலையாக, அணி சேராமல் இருப்பதுதான் இந்தியாவின் பவர். உலகப்போரின் போது கூட இந்தியா (காலனி ஆதிக்கம் தவிர்த்து) அணி சேரா நிலைப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா தனது சமாதான பவரை பயன்படுத்தி ரஷ்யா - நேட்டோ இடையே ஒரு வித பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாட்டு தலைவர்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது.. மோடி என்ன செய்ய போகிறார்.. அவரின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications