
"ரத்த குளியல்" போடும் அதிபர் புதின்.. கேன்சருக்கு மருந்தா? விழிபிதுங்கி நிற்கும் அதிபர் மாளிகை
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் உடல்நிலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. இதற்கிடையே கடந்த ஓராண்டாக அவர் மேற்கொண்ட சிகிச்சை தொடர்பாகத் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் எப்போது உக்ரைன் மீது போரை ஆரம்பித்தாரோ அப்போது முதலே அவருக்கு நிம்மதி போய்விட்டது எனச் சொல்லலாம். ஒரு பக்கம் அவரது படைகள் உக்ரைன் ராணுவத்திடம் திணறி வருகிறது. ஏற்கனவே கைப்பற்றிய இடங்களை எல்லாம் கூட இழந்து வருகிறது.
இப்போது போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது எனத் தெரியாமல் புதின் உள்ளதாகவே மேற்குலக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இப்போது படைகளை வாபஸ் வாங்கினால் அது தோற்றதற்குச் சமம் என புதின் கருதுவதாகக் கூறப்படுகிறது.
கை கொடுக்காத ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் தோற்கிறது காங்கிரஸ்? கார்கேவிற்கும் பின்னடைவு

ரஷ்ய அதிபர் புதின்
இதன் காரணமாகவே போர் முடியாமல் தொடர்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் புதின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்த ஊகங்களும் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. இது ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் அவரின் உடல்நிலை குறித்த புலனாய்வு அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான புதின் மேற்கொண்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரத்த குளியல்
ரஷ்ய புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று, புதின் பலமுறை மான் கொம்புகளில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் குளியல் கொள்கிறார் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் அதிபர் புதினின் இந்த செயல், விலங்குகள் வதைபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், ரஷ்ய அதிபரின் மருத்துவச் சிகிச்சைக்கு இந்த ரத்த குளியலால் நன்மைகள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இருந்த போதிலும், எப்படியாவது உடல்நிலையைத் தேற்ற வேண்டும் என்பதற்காக புதின் இதையெல்லாம் செய்து வருகிறார்.

கேன்சர் வல்லுநர்
தைராய்டு புற்றுநோய் மருத்துவர் ஒருவர் கடந்த 166 நாட்களில் 35 முறை, அதிபர் புதினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்ததாகவும், நோய் தீவிரமான நேரங்களில் புதினின் அரசுப் பயணங்களில் கூட அவருடன் அந்த மருத்துவர் சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் தைராய்டு புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்றவரும் கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணராணருமான யெவ்ஜெனி செலிவானோ என இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ரஷ்யாவில் இருக்கும் தலைசிறந்த கேன்சர் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

மான் கொம்பு ரத்தம்
இந்தாண்டு தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் நோய் சிகிச்சையில் ஒரு மாற்று மருந்தாக மான் கொம்பு ரத்தத்தில் குளியல் மேற்கொண்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. இங்கிலீஷ் மெடிசன் எடுத்துக் கொண்டதில் அவரது உடல்நிலை எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகக் குணமடையவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் பரிந்துரையின் பேரில் அறிவியல் பூர்வமற்ற இந்த மாற்று மருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ரத்த குளியலை புதின் மட்டுமல்ல, மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் மற்றும் காஸ்ப்ரோம் தலைவர் அலெக்ஸி மில்லர் உட்பட ரஷ்யாவின் உயர்மட்ட தலைவர்கள் வட்டத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகள் மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பண்டைய மருத்துவ முறை
மான் கொம்பு ரத்தத்தில் குளிப்பது ரஷ்யா, சீனா மற்றும் கொரியாவில் பழங்கால பாரம்பரியமாகும். இருப்பினும், சைபீரியாவைச் சேர்ந்த அல்தாயின் சிவப்பு மான் கொம்புகளின் ரத்தம், உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஒரு ஊடக நிறுவனமான Proekt மூலம் ஆன்லைனில் இந்த முழு விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன், புதினின் உணவு முறை மற்றும் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்பது குறித்து ஆன்லைனில் பல செய்திகள் வந்தன. புதினின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த வதந்திகள் மற்றும் ஊகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பரவி வருகின்றன.

சுருண்டு விழுந்த புதின்
கடந்த வாரம் அவர், மாஸ்கோவில் உள்ள அதிபர் இல்லத்தில் படியில் இருந்து விழுந்து, தன்னிச்சையாக மலம் கழித்ததாகத் தகவல் வெளியானதை அடுத்துத் தொடர்ந்து அவர் உடல்நிலை குறித்து பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியுள்ளன. அப்போது ரஷ்ய அதிபர் புதின் தனது மாளிகையில் ஐந்து படிகள் கீழே விழுந்ததாகவும், அவருக்கு முதுகின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை ரஷ்ய பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஒருவரும் இந்தத் தகவலை உறுதி செய்திருந்தார். இதற்கு முன், கடந்த மாதம் கியூபா பிரதமர் மிகுவல் டயஸ்-கேனலுடனான சந்திப்பின் போது, புதினின் கைகள் நடுக்கத்துடனேயே காணப்பட்டது. மேலும், அவரது கைகள் நீல நிறத்திலும் மாறிய இருந்தன.

அகண்ட ரஷ்யா
சோவியத் யூனியன் உடைந்த போது அது உக்ரைன்,கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எனப் பல நாடுகளாக சிதறுண்டது. அவை அனைத்தையும் மீண்டும் ஒன்றிணைத்து அகண்ட ரஷ்யாவை உருவாக்க வேண்டும் என்பதே புதினின் நோக்கம். இந்தச் சூழலில் தான் அவரது உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே மெல்ல மோசமடைய தொடங்கியதாயுள்ளது. இதனால் ரொம்ப காலம் உயிர் வாழ மாட்டோம் என்பதை ரஷ்ய அதிபர் உணர்ந்ததாலேயே உக்ரைன் மீது அவசர அவசரமாகப் போரை ஆரம்பித்ததாகவும் சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.