புது தலைவலி.. பாகிஸ்தானுக்கு பிரமாண்ட அதிநவீன போர்க்கப்பல் வழங்கிய சீனா.. இந்திய பெருங்கடலுக்கு குறி
பீஜிங்: இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா, பாகிஸ்தான் நாட்டுக்கு தனது பிரமாண்டமான அதிநவீன போர்க்கப்பலை வழங்கியுள்ளது.
Recommended Video
சமீப காலங்களாக இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சீனா தனது போர்க்கப்பல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் இப்போது பாகிஸ்தானுக்கு போர்க்கப்பலை வழங்கி மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டுக்கு கொம்பு சீவி விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சைனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஎஸ்எஸ்சி) வடிவமைத்து கட்டப்பட்ட இந்த போர்க்கப்பல், ஷாங்காய் நகரில் நடந்த கமிஷன் விழாவில் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

இந்திய பெருங்கடல்
PNS Tughril எனப் பெயரிடப்பட்டது, Type 054A/P போர்க்கப்பல் ஆகும். இதை சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் நேற்று உறுதி செய்துள்ளது. சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மொயின் உல் ஹக் கூறுகையில், பிஎன்எஸ் துக்ரில் போர்க் கப்பல் இந்தியப் பெருங்கடலில் சமநிலையை உறுதி செய்யும். இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பின்னணியில், துக்ரில் போர்க் கப்பல்கள் கடல்சார் சவால்களை சமாளிக்கவும், பாகிஸ்தான் கடற்படையின் திறனை பலப்படுத்தவும், கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சமநிலையை பராமரிக்கவும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

மேம்பட்ட திறன்
PNS Tughril என்பது பாகிஸ்தான் கடற்படைக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்ட கப்பலாகும்.
நவீன தற்காப்பு திறன்களுடன் அதிநவீன போர் மேலாண்மை மற்றும் எலக்ட்ரானிக் போர் முறை வசதிகள் இந்த கப்பலில் உள்ளன. ஒரே நேரத்தில் பல கடற்படைப் போர்ப் பணிகளை இந்த கப்பல், அச்சுறுத்தல் சூழலில் செய்ய முடியும். இந்த போர்க்கப்பல்தான் சீனா இதுவரை ஏற்றுமதி செய்ததிலேயே, மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல் ஆகும்.

போர் விமானம்
பாகிஸ்தானுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் சீனா, பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதிகப்படியாக ஆயுதங்கள் வழங்கும் நாடாக உருவெடுத்துள்ளது. கடற்படைக் கப்பல்களைத் தவிர, JF-17 தண்டர் போர் விமானத்தை உருவாக்க பாகிஸ்தான் விமானப்படையுடன் சீனாவும் கூட்டு சேர்ந்துள்ளது.

பாகிஸ்தானை கைக்குள் போடும் சீனா
இந்தியாவின் கொல்லைப்புறமான இந்தியப் பெருங்கடலில் சீனா படிப்படியாக தனது கடற்படை இருப்பை அதிகரிக்கிறது. அதன் ஒரு பகுதிதான் பாகிஸ்தானை தனது கைக்குள் போட்டுக் கொண்டு கொம்பு சீவுவதும் என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான், இலங்கையில் சீன வல்லாதிக்கம்
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் முனை பகுதியில் உள்ள ஜிபூட்டியில் தனது முதல் ராணுவத் தளத்தைக் கட்டியமைத்தது சீனா. 60 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) அரபிக் கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தையும் சீனா கையகப்படுத்தியுள்ளது. இன்னொரு ப்ககம், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு வாங்கிய பின்னர் அதனை அபிவிருத்தி செய்து வருகிறது.

கப்பலில் ஏவுகணைகள்
சீனாவிடமிருந்து நான்கு நவீன கடற்படை போர் கப்பல்களை வாங்கியது மட்டுமல்லாது, பாகிஸ்தான் 8 சீன நீர்மூழ்கிக் கப்பல்களையும் பெறவுள்ளது என்று அதன் தலைமை அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசி சில மாதங்கள் முன்பு செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். பாகிஸ்தான் கடற்படை 2017 முதல் சீனாவில் இருந்து நான்கு வகை 054A/P போர்க் கப்பல்களை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
முந்தைய சீன போர் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் இப்போது சீனாவிடம் வாங்கிய புதிய கப்பலில் மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகள் அதிக எண்ணிக்கையில் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications