"நீ டிரெஸ்ஸை கழட்டியே ஆகணும்.. " மிரட்டிய டீச்சர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு
ஜாம்ஷெட்பூர்: ஆசிரியையின் வற்புறுத்தலால் ஆடைகளை களைந்த மாணவி பின்னர் அவமானத்தில் தீக்குளித்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வில் 'பிட்' வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியை ஒருவர் மிரட்டி ஆடைகளை களையச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தீக்குளித்ததால் உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த அந்த மாணவி, தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வரம்பு மீறும் ஆசிரியர்கள்..
சமீபகாலமாக ஆசிரியர்களின் அராஜகத்துக்கும், தாக்குதலுக்கும் பல மாணவ, மாணவிகள் உயிரிழந்து வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி காண முடிகிறது. "தனது குடிநீர் பானையை தொட்ட தலித் மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர்", "ஆசிரியை தாக்கியதில் உயிரிழந்த மாணவர்" என வாரத்துக்கு ஒரு முறையாவது இதுபோன்ற செய்திகள் வந்து விடுகின்றன. மாணவர்களிடத்தில் அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் எத்தனை அறிவுறுத்தல்களை வழங்கினாலும், சில ஆசிரியர்கள் அதை சட்டை செய்வதில்லை. இதனால் சில சமயங்களில் மாணவர்கள் தரப்பில் உயிர்ப்பலி வரை சென்றுவிடுகிறது. இப்படியொரு சம்பவம்தான் ஜார்க்கண்டில் நடைபெற்றிருக்கிறது.

அரையாண்டுத் தேர்வு
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் அரசாங்கம் உதவிப் பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது ஆண் - பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் ஒரு பள்ளி ஆகும். இங்கு 1,500-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்தப் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை 9-ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடைபெற்றது.

'பிட்' வைத்திருப்பதாக சந்தேகம்
அப்போது ஒரு தேர்வு அறைக்கு, பள்ளியால் நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படையில் உள்ள ஒரு ஆசிரியை வந்துள்ளார். அங்குள்ள மாணவ - மாணவிகளை கண்காணித்த போது ஒரு மாணவி காப்பி அடிக்கிறோரோ என்ற சந்தேகம் ஆசிரியைக்கு வந்துள்ளது. உடனே அந்த மாணவியை எழுப்பிய ஆசிரியை, அவர் எங்கேயாவது 'பிட்' வைத்திருக்கிறாரா என சோதனை செய்தார். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

ஆடையை களைய கூறிய ஆசிரியை
இருந்தபோதிலும், அந்த மாணவி மீது சந்தேகம் தீராத நிலையில், அவரது ஆடைகளை பக்கத்து அறைக்கு சென்று களையுமாறு ஆசிரியை கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு மாணவி ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த ஆசிரியையோ, 'நீ ஆடைகளை கட்டாயம் களைந்தே ஆக வேண்டும்; இல்லையெனில் உன்னை ஃபெயில் ஆக்கிவிடுவேன்' என மிரட்டியுள்ளார். ஏற்கனவே அந்த தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் இருக்கும் ஆசிரியரும், அந்த ஆசிரியையிடம் ஆடைகளை களையச் சொல்லாதீர்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் ஆசிரியை கேட்கவில்லை.

அவமானம் - தீக்குளிப்பு
பின்னர் வேறு வழியில்லாமல் அந்த மாணவி பக்கத்து அறைக்கு சென்று தனது ஆடைகளை களைந்திருக்கிறார். பின்னர் ஆசிரியை அவரை நிர்வாணமாக சோதனை செய்தார். அதிலும் பிட் கிடைக்காததால் ஆசிரியை சென்றுவிட்டார். ஆசிரியையின் இந்த நடவடிக்கையால் அந்த மாணவி மிகவும் அவமானம் அடைந்துள்ளார். இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற மாணவி, யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார். பின்னர் மொட்டை மாடிக்கு சென்ற அந்த மாணவி, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது பெற்றோர், அங்கு சென்று அவரது உடலில் உள்ள தீயை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மாணவியின் ஆடைகளை களையச் செய்த ஆசிரியையை கைது செய்ய வலியுறுத்தி ஜாம்ஷெட்பூரில் பொதுமக்கள் பல இடங்களில் போராட்டடம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications