இப்படி பண்ணீட்டீங்களே..உள்ளடி வேலையால் கண்ணீர் மல்க வெளியேறிய “தோழர்”..முன்மொழியக் கூட யாரும் வரலையே
கரூர் : கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி இருந்த நிலையில் அவரை முன்மொழிய கூட திமுகவினர் முன்வராத நிலையில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவரே பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததால், கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கண்ணீர் மல்க பேரூராட்சியில் இருந்து வெளியேறினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெருவெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றிய நிலையில், நகராட்சி பேரூராட்சிகளிலும் அதிக இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றிக்கொடி நாட்டினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தொடர்ந்து மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைமேயர் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை வழங்க திமுக முன்வரவில்லை. அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமை ஒதுக்கியது.

கூட்டணிக்குள் சலசலப்பு
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றி வருகின்றனர். கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

புலியூர் பேரூராட்சி
இதேபோல்தான் கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மறைமுக தேர்தலில் திமுக வினர் தங்கள் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தி பேரூராட்சியை கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் திமுக சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுகவும் ஒரு வார்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு வார்டில் பாஜக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்ற நிலையில் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவியை ஒதுக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மறைமுக தேர்தலில் தலைவர் பதவியை தனக்கு ஒதுக்க வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வார்டு உறுப்பினர் கலாராணி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருக்கு பாஜக வேட்பாளர் மட்டுமே முன்மொழிய தயாராக இருந்த நிலையில் வேறு யாரும் அவரை முன்மொழியவில்லை.

கண்ணீர் விட்ட வேட்பாளர்
குறிப்பாக திமுக பேரூர் கழக செயலாளர் அம்மையப்பன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும் 3-வது வார்டு திமுக உறுப்பினர் புவனேஸ்வரியை பேரூராட்சி தலைவர் பதவிக்கு முன்மொழிவு செய்தனர். தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி மேலும் ஒரு உறுப்பினர் முன்மொழிய வேண்டும் என்பதால் நீண்ட நேரம் காத்திருந்தார்.இதனிடையே புவனேஸ்வரி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு புலியூர் பேரூராட்சியை திமுகவினர் தங்களிடமிருந்து தட்டிப் பறித்தனர் எனவும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .












Click it and Unblock the Notifications