ஒசூர் அருகே அரசு பேருந்து மோதல்... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... உயிர்தப்பிய 6 பேர்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், கார் மீது பேருந்து மோதியதில் பள்ளத்தில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவமாக காரில் பயணம் செய்த 6 பேர் உயிர் தப்பினர்.
Recommended Video
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் ஒரு விபத்து சம்பவம் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 ஆண்கள் என 6 பேர் பெங்களூருவிலிருந்து இன்று, சென்னைக்கு செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார், ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுண்டகிரி என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது, அரசு பேருந்து ஒன்று காரை முந்திச் செல்ல முயன்றது. அரசு பேருந்தை வேலூரை சேர்ந்த சாய்ராம் கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அரசு பேருந்து, அந்த காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அந்த கார், சாலை தடுப்பு மீது இடித்து, அங்குள்ள கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக கால்வாயில் கவிழ்ந்து காரில் தவித்து வந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
திருப்பூரில் கோர விபத்து.. மூவர் பலி! சிதறி கிடந்த உடல்கள் - உருக்குலைந்த கார்! சிதைந்த பேருந்து
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சாலை விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தினர்.
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்து மோதியதில், பள்ளத்தில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.