'இது வெறும் தொடக்கம் தான்..' பிரிட்டனில் 25,000 பேருக்கு ஓமிக்ரான்.. ஆய்வாளர்கள் முக்கிய வார்னிங்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது வெறும் தொடக்கமாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்,
வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் நிலைமையை அப்படியே புரட்டிப் போட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வைரஸ் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உலக சுகாதார அமைப்பும் ஓமிக்ரானை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓமிக்ரான் கேஸ்கள்
உருமாறிய கொரோனா வகையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது பிரிட்டன் தான். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு டெல்டா கொரோனா கூட அங்கு வைரஸ் கேஸ்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. இந்தச் சூழலில் தற்போது அங்கு ஓமிக்ரான் கேஸ்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் ஓமிக்ரான்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை பிரிட்டன் நாட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டன. இது வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 10 ஆயிரம் அதிகமாகும். இதுவரை பிரிட்டனில் ஓமிக்ரான் கொரோனாவால் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதேபோல ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

வரும் நாட்கள்
பிரிட்டன் நாட்டில் வரும் நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரிட்டன் நாட்டின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அதாவது வேக்சின் பணிகள் தொடங்கப்படும் முன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எந்தளவு இருந்ததோ அதே அளவுக்கு இப்போது ஓமிக்ரானால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்,.

எந்தளவு ஆபத்து
ஓமிக்ரான் கொரோனாவால் பிரிட்டன் நாட்டில் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆளும் கட்சியே சேர்ந்தவர்களே பலரும் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உள்ளனர். இதுவரை ஓமிக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாத போது எதற்காக இந்த கட்டுப்பாடுகள் என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலையில் வைரஸ் எந்தளவு தீவிரமாக இருக்கும் எனத் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ள வல்லுநர் ஆலோசனை குழு, முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இது டெல்டாவை காட்டிலும் குறைந்த அளவு தீவிரம் கொண்டதாகவே தெரிவதாகக் குறிப்பிட்டனர்.

வெறும் தொடக்கம் தான்
அதேநேரம் வைரஸ் கேஸ்கள் மிக அதிகளவுக்கு உயரும் போது மருத்துவமனைகளால் அதைக் கையாள முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். மேலும், "ஓமிக்ரான் கொரோனா தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இது வெறும் தொடக்கம் தான். வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதை நாம் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
Recommended Video

மீண்டும் ஊரடங்கு
பிரிட்டன் நாட்டில் சனிக்கிழமை மட்டும் 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது வரும் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், லண்டனில் அவசர நிலை (major incident) அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரிட்டன் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று தகவல் பரவி வரும் நிலையில், அதைப் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications