ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு! ஒட்டுமொத்தமாக நிராகரித்த பிரிட்டன் மக்கள்.. முக்கிய தேர்தலில் படுதோல்வி
லண்டன்: பிரிட்டனில் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அவருக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைப் போலவே பிரிட்டன் பொருளாதாரமும் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் தான் உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் 6ஆம் இடத்தில் இருந்த பிரிட்டன் 7ஆவது இடத்திற்குச் சரிந்து உள்ளது. இந்தியப் பொருளாதாரம் இப்போது 6ஆம் இடத்தில் உள்ளது.
அடடே! பிரிட்டன் பிரதமரானாலும் இந்திய கலாச்சாரம் மறக்காத ரிஷி சுனக்! மகள் குச்சிப்புடி ஆடி அசத்தல்

பிரிட்டன்
பொருளாதார பிரச்சினைகள் ஒரு பக்கம் என்றால், அரசியல் ரீதியாகவும் அங்குப் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களில் மட்டும் இரண்டும் பிரதமர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, லிஸ் டிரஸ் பொருளாதார நெருக்கடி காரணமாகவே பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது முடிவுகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அவர் பிரதமராகப் பதவியேற்று வெறும் 45 நாட்களில் பதவி விலகினார். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவிக்கு வந்தார்.

ரிஷி சுனக்
பிரிட்டன் வரலாற்றில் குறைந்த வயது பிரதமர் என்ற சாதனையை ரிஷி சுனக் படைத்துள்ளார். மேலும், பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்து ஒருவர் இதுவே முதல்முறையாகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்ததை இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இந்திய வம்சாவளியினர் கொண்டாடித் தீர்த்தனர். கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில், அங்குப் பிரச்சினைகளை மீண்டும் எழுந்துள்ளன. பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க ரிஷி சுனக் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்குப் பலன் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

படுதோல்வி
அதேநேரம் இப்படி பிரதமர்கள் மாறிக் கொண்டே இருப்பது, பிரிட்டன் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உண்மையாக்கும் வகையில், அங்கு நடந்த இடத்தேர்தலில் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதி நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. செஸ்டர் தொகுதி ஏற்கனவே தொழிலாளர் கட்சியிடம் இருந்த தொகுதி தான். இப்போது அதைத் தக்க வைத்துள்ளனர்.

நிராகரித்த மக்கள்
இருப்பினும், இந்தத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது, பிரிட்டன் மக்களுக்கு அதிருப்தி அதிகரிப்பதைக் காட்டுவதாக அங்குள்ள அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். செஸ்டர் தொகுதியில் தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளைப் பெற்றார். அதேநேரம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளருக்கு 22% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இது நாடு முழுக்க நிலவும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகத் தொழிலாளர் கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

உட்கட்சி குழப்பம்
ரஷ்யா உக்ரைன் போர், கோவிட் உள்ளிட்ட பல காரணங்களால் பிரிட்டன் பொருளாதாரம் தடுமாறுகிறது. விலைவாசி அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்துடன் அரசியல் குழப்பமும் சேர்ந்துவிட்டது. சில மாதங்களில் மட்டும் மூன்று பிரதமர்கள் மாறியுள்ளனர். கன்சவ்வேடிவ் கட்சியினர் உட்கட்சி குழப்பங்களைச் சமாளிக்கவே போராடி வரும் நிலையில், இது மக்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ளது. இதன் காரணமாகவே இடைத்தேர்தலில் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்து உள்ளது.

விளக்கம்
பொதுவாக வெளிநாடுகளில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெல்வது கடினம் தான். ஆளும் அரசு மீது இயல்பாகவே மக்களுக்கு அதிருப்தி இருக்கும் இதனால் அங்கெல்லாம் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெல்வது கடினம் தான். அதேபோலத் தான் இதிலும் கன்சவ்வேடிவ் கட்சி தோல்வியடைந்துள்ளதாக கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அக்கட்சியிலேயே உள்ள சில மூத்த தலைவர்கள் இதைத் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

நம்பிக்கை இல்லை
கன்சர்வேடிவ் மூத்த தலைவர் சார்லஸ் வாக்கரே அடுத்த தேர்தலில் தங்கள் கட்சி தோற்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், "ரிஷி சுனக் நிலைமையைச் சமாளிக்க நல்ல நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறார். இருந்த போதிலும், அடுத்து 2024இல் நடைபெறும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையவதை தவிர்க்க முடியாது. படுதோல்வி அடையாமல் காப்பது மட்டும் ரிஷி சுனக் செய்யும் பணியாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார். பிரிட்டனில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் நிலையில், அடுத்து 2024இல் அங்குப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.