பிறந்து, வளர்ந்து, திருமணமாகி, கொள்ளுபாட்டி ஆகியாச்சு.. 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் பாட்டி!
இங்கிலாந்தில் ஒரே வீட்டில் தொடர்ந்து 104 ஆண்டுகளாக வசித்து வருகிறார் மூதாட்டி ஒருவர்.
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கடந்த 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு என்பது செங்கல், சிமெண்ட் வைத்து மட்டும் கட்டப்பட்டது இல்லை.. அது நம் நினைவுகளின் அடையாளம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில வீடுகள் மறக்காத நினைவுகளாக எப்போதுமே நிறைந்திருக்கும். பிறந்தது, வளர்ந்தது, வேலை பார்க்கும்போது தங்கி இருந்தது, திருமணமாகி சென்றது என இந்த வீடுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாறுபடலாம்.
ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பாட்டிக்கோ, பிறந்ததில் இருந்து இப்போது வரை ஒரே வீடுதான் சகலமாகவும் இருந்து வருகிறது.

வாடகை வீடு
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில் ஹூத்வெயிட்டைச் சேர்ந்தவர் எல்சி ஆல்காக் என்ற மூதாட்டி. இவரது தந்தை, எல்சி பிறப்பதற்கு முன்னதாக, 1902ம் ஆண்டு இந்த வீட்டை 30 பவுண்டிற்கு வாடகைக்கு எடுத்துள்ளார் (இப்போதைய கணக்கில் இந்திய மதிப்பில் இது ரூ. 2,841)இந்த வீட்டில்தான் 1918ம் ஆண்டு ஜூன் மாதம் எல்சி பிறந்துள்ளார். என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, வாடகைக்கு எடுத்த வீட்டை எல்சியின் தந்தை மாற்றவேயில்லை.

புகுந்த வீடும் அதே..
இரண்டு உலகப் போர்களின் போதும், எல்சி தனது குடும்பத்தினருடன் அதே வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். எல்சிக்கு 14 வயதான போது, அவரது தாய் உடல்நலக்குறைவினால் காலமானார். தொடர்ந்து அப்பாவுடனேயே இருந்து வந்த எல்சி, 1941ம் ஆண்டு பில் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போதும் அவர் அந்த வீட்டை விட்டுச் செல்லவில்லை.

எல்சியின் திட்டம்
வயதான தன் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக, தன் கணவருடன் அதே வீட்டில் தங்கி விட்டார். பின்னர் எல்சியின் தந்தையும் 1949 இல் இறந்துவிட, அப்போதும் அந்த வீட்டைக் காலி செய்ய எல்சிக்கு மனது வரவில்லை. ஒரு கட்டத்தில் அதனை தன் சொந்த வீடாக மாற்றிக் கொள்வது என எல்சி முடிவு செய்தார்.

வீட்டின் முக்கியத்துவம்
அதனைத் தொடர்ந்து, 1960ல் கடன் வாங்கி 250 பவுண்டிற்கு அந்த வீட்டை வாங்கினார் எல்சி. "நான் வேறு எங்கும் வாழ விரும்பியதில்லை. எனது வீடு தான் எனக்கு எல்லாம். இருட்டில்கூட சர்வசாதாரணமாக நடந்து செல்லும் அளவிற்கு இந்த வீடு எனக்கு பழக்கமாகி விட்டது" என அந்த வீட்டின் முக்கியத்துவம் குறித்து கூறுகிறார் எல்சி.

பழமையான கழிவறை
இந்த வீட்டை எல்சியின் தந்தை வாடகைக்கு எடுத்தே, சுமார் 120 ஆண்டுகள் ஆகிறது. அதற்கும் முன்பு எப்போது அந்த வீடு கட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனாலும், அந்த வீட்டின் பழமையை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகின்றனர் எல்சி குடும்பத்தினர். இரண்டாம் உலகப் போரின் போது அந்த வீட்டிற்கு வெளியே கட்டப்பட்ட கழிவறைகூட, இன்றும் பயன்பாட்டில் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வீட்டில் சின்னச் சின்ன மாறுதல்களைத்தவிர பெரிதாக இதுவரை அவர்கள் எதுவும் மாறுதல்களைச் செய்யவில்லை.

மாறாத வீடு
எல்சியின் மகன் ரேவுக்கு தற்போது 75 வயதாகிறது. 'நினைவுகள் நிறைந்த இந்த வீட்டை தனது தாய் நேசிப்பதாக' கூறுகிறார் அவர். தனது இளவயதில் அந்த வீட்டின் ஒரு பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மறு உருவாக்கம் செய்வது போன்று, தற்போதும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார் எல்சி. அதில் எல்சி தான் உருவத்தில் மாறி இருக்கிறாரே தவிர வீடு அப்படியே இருக்கிறது.












Click it and Unblock the Notifications