அயோத்தி..காசியை தொடர்ந்து.. உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவின் அடுத்த மூவ், மதுரா!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் மையமாக மதுராவை உற்றுநோக்கியுள்ளது ஆளும் பாஜக.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி நடக்கிறது.

அமித்ஷா
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி ஏற்கனெவே காசியில் பிரசாரத்தை துவங்கிவிட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதுராவில் தன்னுடைய பிரசாரத்தைத் துவங்கியுள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்வதே உத்தரப்பிரதேசம் தான் என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி
மேலும், ''சமாஜ்வாதி ஒரு இனத்தினருக்காகவும், பகுஜன் சமாஜ் மற்றொரு இனத்தினருக்காகவும் பணியாற்றி இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இதன்மூலம் எந்தக் கட்சி அல்லது தத்துவம் மாநிலத்துக்கு தேவை என்பதை இந்த தேர்தல் சொல்லும். அயோத்தியில் கோயில் கட்டப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.

மதுரா
மதுராவில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கிருஷ்ணர் பிறந்த பூமியாக கருதப்படும் மதுராவை தங்கள் கோட்டையாக கருதுகிறது பாஜக. அயோத்தி, காசிக்கு அடுத்தபடியாக எப்போதும் பாஜகவின் கண் இருக்கும் இடமாக மதுரா இருக்கிறது. மதுராவில் பாஜக வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏவும் மாநில அமைச்சருமான ஸ்ரீகாந்த் ஷர்மா. கடந்த தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிருஷ்ணர் கோயில்
அயோத்தி கோயில் கட்ட தீர்ப்பு வந்தது முதல் தற்போது கோயில் கட்ட ஆரம்ப வேலைகள் நடக்கிறது. அதேபோல் காசி விஸ்வநாதர் கோயிலும் புனரமைக்கப்பட்டது. அடுத்த கோயில் புனரமைப்பு மதுராவில் நடக்கும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 'பிராஜக்ட் மதுரா' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த பாஜக முயற்சி செய்கிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த ஊரான கோரக்பூர் சென்றதை விட அதிக அளவு சென்றது மதுராவுக்குத்தான். யோகி கிட்டத்தட்ட 18 முறை முதல்வர் என்ற அடிப்படையில் மதுரா சென்றுள்ளார். தற்போது மதுரா கோயிலில் நுழைவுவாயில் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. யோகி ஆட்சியில் மதுரா கோயிலை சுற்றி சாலைகள் போடப்பட்டிருக்கிறது. இதனால் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முஸ்லிம்
அயோத்தியைப் போலவே மதுராவிலும், கோயிலுக்கு அருகே முகலாய மன்னன் அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்ட மசூதி இருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என மதுரா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோயிலை சுற்றி இருக்கும் முஸ்லீம்கள், கோயிலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொடுக்கிறார்கள். கிட்டத்தட்ட 17 சதவிகித முஸ்லிம் ஓட்டு மதுராவில் இருக்கிறது. சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதே முஸ்லின் மக்களின் புகாராக இருக்கிறது.
Recommended Video

பவர் அரசியல்
அயோத்தி, காசி மற்றும் மதுராவில் வெற்றி பெறுவதால் பாஜக தங்களின் பவர் அரசியலை தக்க வைக்க முடியும். இதனால் இந்த இடங்களுக்கு பாஜக-வின் ஸ்டார் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். இதுதான் பாஜகவின் அடையாளமாக இருக்கும். தாங்கள் முன்னிறுத்தும் இந்துத்வ அரசியலின் அடையாளமாக இந்தத் தொகுதிகளின் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது பாஜக. மதுராவை உத்தரப்பிரதேச தேர்தலின் மையமாகப் பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications