"உபி-இல் பெண்கள் மிக பாதுகாப்பாக உள்ளனர்.. அதற்கு காரணம் யோகி தான்.." பிரதமர் மோடி பாராட்டு மழை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் வரும் 10ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த 5 மாநில தேர்தல்களில் பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. குறிப்பாகப் பேரணிகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்
இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும் காணொலி மூலம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். உபி-இல் கடந்த சில தேர்தல்களில் எந்தவொரு ஆளும் கட்சியும் மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்தது இல்லை. இந்த நிலையை மாற்றி அங்கு ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. குறிப்பாகப் பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம் என்பதால் உ.பி-ஐ இமேஜ் விஷயமாகவும் கருதுகிறது பாஜக தலைமை!

இந்தியாவின் இதயத் துடிப்பு
இதனால் பாஜக முக்கிய தலைவர்கள் பலரும் உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் மோடியும் தொடர்ந்து அங்கு டிஜிட்டல் பேரணிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்தச் சூழலில் ஆக்ரா, மதுரா பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் பேரணிகளில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் இதயமும் இதயத் துடிப்பும் உத்தரப் பிரதேசம் தான். நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை எப்போதும் உபி-தான் எப்போதும் காட்டியுள்ளது. இன்று மீண்டும் ஒருமுறை உத்தரப்பிரதேசம் நாட்டிற்கு ஒரு புதிய பாதையைக் காட்ட உள்ளது. அவர்களுக்கு மட்டுமே மக்களின் ஆசி கிடைக்கும். உத்தரப் பிரதேச மக்களுக்குச் சேவை செய்து, உத்தரப் பிரதேச வளர்ச்சிக்குப் பாடுபடுவோருக்கு மட்டுமே உபி மக்கள் ஆதரவு தருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெண்கள்
பாஜகவின் ஆட்சியில் ரவுடிகள் அராஜகம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் முன்பு அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர். ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் குற்றவாளிகள் நடுங்குகிறார்கள். உத்தரப் பிரதேசம் இப்போது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான இடமாக உள்ளது. இளம் பெண்கள் இப்போது அச்சமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து, தங்கள் லட்சியங்களைத் தொடர முடிகிறது. அதற்குக் காரணம் யோகி ஆத்தியநாத்தின் ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தான். முந்தைய ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

வகுப்புவாத அரசியல் வேலை செய்யாது
குற்றவாளிகள் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைக் கூட கொள்ளையடித்தனர். அப்போது அவர்கள் இஷ்டத்துக்கு எல்லா வீடுகளையும் ஆக்கிரமிப்பார்கள். இதனால் மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்தே வெளியே தள்ளப்பட்டனர். பணபலம், ஜாதி, வகுப்புவாதம் உள்ளிட்டவற்றை வைத்து ஒருவர் எந்தளவு அரசியல் செய்தாலும் மக்களின் அன்பை ஒருபோதும் பெற முடியாது.

கனவுகளில் வரும் கடவுள்
கடந்த ஆட்சியில் மத வழிபாட்டுத் தலங்கள் மறக்கப்பட்டது. இப்போது பாஜகவின் வளர்ச்சிப் பணிகளால், பொதுமக்களின் கனவுகளில் கடவுள் தரிசனம் தருகிறார். முந்தைய அரசுக்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது தான் அவர்களின் வேலையாக இருந்தது. ஆனால், நாங்கள் இப்போது உத்தரப் பிரதேசத்தின் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம். முக்கிய நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறோம். மக்கள் அச்சமின்றி பயணிக்கின்றனர்.

உபி எங்கள் குடும்பம்
இதற்கு முன்பு உத்தரப் பிரதேச அரசு வெறும் ஒரு குடும்பத்தை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தது. இப்போது இருக்கும் பாஜகவுக்கு ஒட்டுமொத்த உ.பி.யும் ஒரே குடும்பம் தான். யோகியின் ஆட்சியில் மதுரா, ஆக்ரா மற்றும் புலந்த்ஷாஹர் பகுதியில் ஏழைகளுக்கு 85,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 7.5 லட்சத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பலன் பெரும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications