தலையை பாதியாக மொட்டையடித்து.. வீதிவீதியாக இழுத்து செல்லப்பட்ட பழங்குடியின சிறுவர்கள்.. கொடூரம்
லக்னோ: திருட்டுச் சம்பவம் ஒன்றில் எந்த விசாரணையும் நடத்தாமல் பழங்குடியின சிறுவர்கள் மூன்று பேரை பாதி தலையை மொட்டை அடித்து, அவர்களை கயிறு மூலம் கட்டி வீதிவீதியாக இழுத்துச் சென்று அடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் சமீபகாலமாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை உயர் ஜாதி இளைஞர்கள் அழைத்து, தங்கள் கால் பாதங்களை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த இரக்கமற்ற சம்பவம் நடைபெற்றது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என செய்திகள் வெளியாகின்றன. இதன் காரணமாகவே, இதுபோன்ற குற்றங்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அநத வகையில், தற்போது இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

இரும்புக் கடையில் திருட்டு
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் ஒரு பெரிய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு பின்னால் உள்ள பெரிய குடோனில் டன் கணக்கில் இரும்புக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு இந்தக் கடையில் இருந்த 20 கிலோ எடைக்கொண்ட இரும்புப் பொருட்கள் திருடுப் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கடையின் உரிமையாளர் ராஜீவ் குப்தா (38) அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

வீடு புகுந்து தாக்குதல்
இந்நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின சிறுவர்கள் 3 பேர் மீது அவருக்கு சந்தேகம் வந்தது. ஆனால், இதுகுறித்து போலீஸாரிடம் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி கூறியிருந்தால், போலீஸார் அந்த சிறுவர்களை அழைத்து விசாரணை நடத்தி இருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல், தனது நண்பர்களுடன் அந்த சிறுவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதிக்கு ராஜீவ் குப்தா நேற்று சென்றார். பின்னர், அந்த சிறுவர்களின் குடிசை வீடுகளுக்குள் புகுந்த அவர்கள், "என் கடையிலேயே திருடும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டதா?" எனக் கேட்டு சிறுவர்களை கடுமையாக தாக்கினர். தாங்கள் திருடவில்லை என சிறுவர்கள் எவ்வளவோ கூறியும், அவர்கள் அதை சட்டை செய்யவில்லை.

பாதி தலையை மொட்டை அடித்து..
இதை தடுக்க முயன்ற சிறுவர்களின் பெற்றோரையும் அவர்கள் அடித்து உதைத்தனர். அதோடு விடாமல், அந்த 3 சிறுவர்களையும் தரதரவென இழுத்து வந்த அவர்கள், சாலைக்கு நடுவே அமர வைத்து அவர்கள் தலையில் பாதி அளவுக்கு மொட்டை போட்டனர். அதன் பிறகு அந்த சிறுவர்களை ஒன்றாக இணைத்து கயிறால் கட்டி, வீதிவீதியாக இழுத்துச் சென்று தாக்கினர். அவர்கள் மட்டுமல்லாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் அவர்களை ஜாதி பெயரை கூறி கொடூரமாக அடித்தனர். ஒருகட்டத்தில் அடி தாங்க முடியாமல், சிறுவர்கள் கீழே விழுந்ததால் அவர்களை அங்கேயே விட்டுச் சென்றனர்.

கைது நடவடிக்கை
இந்தக் கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த சிறுவர்களை இரக்கமில்லாமல் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியறுத்தினர். மேலும் சிலர், அந்த வீடியோவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில டிஜிபி ஆகியோருக்கு 'டேக்' செய்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, போலீஸார் இரும்புக் கடை உரிமையாளர் ராஜீவ் குப்தாவை கைது செய்தனர். தலைமறைவாகிய மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications