ப.சிதம்பரத்தை விசாரித்த.. அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்,உ.பி. தேர்தலில் பாஜக சார்பில் போட்டி
லக்னோ: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்வர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரப்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை விரைவில் நடக்கவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் சரிசமமாக களத்தில் மோதி வருகின்றன. இரு கட்சிகளும் மாறி மாறி கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து வருகின்றன.

தேர்தல்
பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்குத்தான் உத்தரப்பிரதேசத்தில் வாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சியில் இருந்து முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவை பாஜக-வுக்கு அழைத்து வந்தனர். அதுபோல் பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களை சமாஜ்வாதி கட்சி தங்கள் கட்சிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தற்போது பாஜக-வில் இணைந்துள்ளார்.

சிதம்பரம் விசாரணையில் ராஜேஷ்வர் சிங்
அமலாக்கத்துறையின் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் ராஜேஷ்வர் சிங். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை குழுவில் இடம் பெற்றவர் இவராகும். உத்தரபிரதேச காவல்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர், 14 ஆண்டுகள் அமலாக்கத்துறையிலும் பணியாற்றியுள்ளார். அமலாக்கத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து ராஜேஷ்வர் சிங் விலகினார். தனக்கு விருப்ப ஓய்வு வழங்கும்படி மத்திய அரசுக்கு ராஜேஷ்வர் சிங் கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய அரசு அவரை பணியிலிருந்து விடுவித்தது.

கார்த்தி சிதம்பரம்
அமலாக்கத் துறையில் விஆர்எஸ் வாங்கிவிட்டு பாஜக வேட்பாளராவது, கிளை கம்பெனியிலிருந்து தாய் கம்பெனியில் இணைவதை போல உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார்.

பாஜக
விருப்ப ஓய்வு பெற்ற ராஜேஷ்வர் சிங், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதை அவருடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில், 'பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உ.பி முதல்வர் யோகி போன்ற தலைவர்கள் நாட்டை வல்லரசாகவும், இந்தியாவை உலகின் குருவாகவும் மாற்றும் உறுதியை எடுத்துள்ளனர். நானும் அவர்களுடன் இணைந்து தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடவுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்
ராஜேஷ்வர் சிங் விருப்ப ஓய்வு பெற்று, அதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் கொடுத்ததுமே அவருக்கு பாஜக-வில் சீட் கொடுக்கப்படும் என்று சிலர் தெரிவித்தனர். இந்நிலையில், ராஜேஷ்வர் சிங்குக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. பிஜேபி எம்.எல்.ஏ சுவாதி சிங்குக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட ராஜேஷ்வருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவில் அதிகாரிகள்
கடந்த சில வருடங்களாக பாஜக-வில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இணைவது அதிகரித்துள்ளது. பெங்களூரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அதேபோல், ஹர்தீப் சிங் பூரி, ஜெய்சங்கர், ஆர்.கே.சிங், ஏ.கே.ஷர்மா ஆகியோரும் பாஜக-வில் இணைந்தனர். கடந்த வாரத்தி பஞ்சாப் பாஜக-வில் ஜக்மோகன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்துள்ளார். அவருக்கும் அமிர்தசரஸில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தற்போது ராஜேஷ்வர் சிங்குக்கும் பாஜகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications