ஆமா.. எத்தனாவது பொறந்தநாளு? ஜெ. பிறந்தநாள் பற்றி கட்சியினரிடம் கேட்டு தெரிந்துகொண்ட மாஜி அமைச்சர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
மதுரை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எத்தனையாவது பிறந்தநாள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிற கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காளவாசல் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளைக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த செல்லூர் ராஜூ மதுரைக்கு வந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் ஈரோடு கிளம்பும் பரபரப்புடனே செய்தியாளர்களிடமும் பேசினார்.

எது மாதிரியும் இல்லாம புது மாதிரி
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஈரோடு தொகுதி மக்கள் வித்தியாசமான மக்களாக உள்ளனர். ஆளுங்கட்சியினர் இதுவரை எங்களை வந்து பார்த்ததில்லை, ஜெயித்த திமுக கவுன்சிலர்கள் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி. ஆளும் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்கள்.

நோபல் பரிசே கொடுக்கலாம்
புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வபர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கிறார்கள். இடைத்தேர்தலில் என்ன செய்தால் வாக்காளர்களை கவர முடியும் எனச் செயல்படும் திமுகவினருக்கு நோபல் பரிசே வழங்கலாம். திருமங்கலம் ஃபார்முலா, அரவக்குறிச்சி ஃபார்முலாவை தொடர்ந்து இப்போது ஈரோடு கிழக்கில் ஒரு புது ஃபார்முலாவை கையாள்கிறார்கள். ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல மக்களை அழைத்துச் சென்று அடைத்து வைத்து பிரியாணி, சாப்பாடு எனக் கொடுக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்த பக்கம் கால்ஷீட்
மநீம தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "நடிகர் கமல்ஹாசனுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. அவர் ஒரு சிறந்த ஒரு நடிகர் அவ்வளவு தான். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. கமல்ஹாசனின் கொள்கை, பணத்துக்காக விலை போகக்கூடிய கொள்கை. இவர்கள் எல்லாம் பணத்துக்காக நடிக்கக் கூடியவர்கள். சினிமாவில் நடிப்பதை விட கூடுதலாக பணம் கிடைக்கும் என்பதற்காக கமல்ஹாசன் இங்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

ஓட்டு போட நினைப்பவர்கள் கூட
கமல்ஹாசனை ஒரு அரசியல்வாதியாக மக்கள் பார்க்கவில்லை. ஒரு சிறந்த நடிகர் அவ்வளவு தான். கமல்ஹாசன் பேசுவதை கவனித்தால் திமுகவுக்கு ஓட்டு போட நினைப்பவர்கள் கூட ஓட்டு போட மாட்டார்கள். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது, வாக்காளர்களுக்கும் தெரியாது. திமுக அந்தக் காலத்து கட்சி, கமல்ஹாசனை எப்படி ஆஃப் பண்ணுவது என்பது திமுகவிற்கு நன்கு தெரிந்துள்ளது. கமல்ஹாசன் ஒரு கொள்கைவாதி கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

எத்தனையாவது பிறந்தநாள்?
ஜெயலலிதாவின் பிறந்தநாளை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுகவினர் கொண்டாடவிருக்கும் சூழலில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தான் இன்று மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு வரும் பிப்ரவரி 24 எத்தனையாவது பிறந்தநாள் எனத் தெரியாத முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications