ஆ.ராசாவை பெற்றதற்கு அம்மா வருத்தப்படனுமாம்.. பாஜகவைவிட அதிகமாக பாய்ந்த செல்லூர் ராஜு
மதுரை: ஆ.ராசா போன்ற மகனை பெற்றதற்கு, அவரின் அம்மா வருத்தப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கழிப்பறை கட்டுதல் , அங்கன்வாடி கட்டுதல் மையம் ஆகியவற்றுக்கான பூமி பூஜை விழாவானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழகம் முழுவதும் புதிய தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து மாத்திரைகள் இல்லாததே காரணம். அதுமட்டுமல்லாமல் பன்றி காய்ச்சல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறது.

குழு அமைக்க வேண்டும்
அதனால் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்படுகிற காய்ச்சலுக்கு உரிய மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மதுரையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர், சுகாதார மாவட்ட அலுவலர், மாநகராட்சி ஆணையாளர் என குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆ.ராசா பற்றி கருத்து
தொடர்ந்து ஆ.ராசா சர்ச்சை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் அம்மா வருத்தப்பட வேண்டும். ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடைய பெயர் கூட ராஜா தான். ஆனால் எங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆ.ராசா செயல்படுகிறார்.

ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்?
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே கேலிக் கூத்தாக இருக்கக்கூடிய நிலையில் ஊடகங்கள் அனைத்திலும் ஆ.ராசா குறித்த பேச்சுக்கு கண்டனங்கள் வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறப்பு குறித்தும் ஆ.ராசா தவறாக பேசி இருக்கிறார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் ஆ. ராசாவிற்கு வாய்பூட்டு போட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆ.ராசா விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்
தொடர்ந்து, தமிழர்களைப் பொறுத்தவரை ஜாதி மதம் பார்க்காமல் பழகி வருகிறோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன. என்ன தவறு நடந்தாலும் குரல் கொடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார். அதேபோல், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் உட்பட அனைவரும் மௌனமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் போய்விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications