ப்ரேக்கிங் நியூஸ்! எம்பி தேர்தலில் மதுரையில் களமிறங்கும் பிரதமர் மோடி? பரபரப்பை கிளப்பிய போஸ்டர்கள்!
மதுரை : 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சினர் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி என ஒட்டபட்டுள்ள போஸ்டர் பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக பல்வேறு பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த தேர்தல்களில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக படுதோல்வியை சந்தித்து நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறுதல் வெற்றி கிடைத்தது.
தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தோல்வியடைந்த நிலையில் நான்கு பேர் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்வாகினர். குறிப்பாக வானதி சீனிவாசன், காந்தி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களாக அமர்ந்தனர்.

தமிழக பாஜக
அதே நேரத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் படுதோல்வியை சந்தித்தனர். உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவில் பாஜக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளை கைப்பற்றாத நிலையில் அடுத்ததாக மாநிலங்களை தேர்தலை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக வேட்பாளர் தேர்வு கூட்டணி உள்ளிட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கவில்லை. காரணம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தமிழக பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. இதனிடைய தமிழகத்தில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

அண்ணாமலை
இதற்காக அண்ணாமலை பல தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்லும். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த போதே பிரம்மாண்ட போஸ்டர்கள் அவர் மதுரையில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி ஒட்டப்பட்டன. இந்த நிலையில் தற்போது மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதாகவே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி என நரேந்திர மோடியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் போஸ்டர்கள்
இந்நிலையில், தற்போது மதுரை மாநகர் முழுவதும் நரேந்திர மோடியின் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல செய்தி சேனல்களில் வருவது போல 'பிரேக்கிங் ஹெட்லைன்ஸ் 2024 மக்களவைத் தேர்தல் மதுரையில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார்' என்பது போல பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களின் புகைப்படங்களுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது . தமிழகத்தில் பாஜக காலூன்ற திட்டமிட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் போட்டியிடுவார் என கடந்த சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications