இணைந்த துருவங்கள்.. மதுரை டூ சென்னை.. ஒரே விமானத்தில் ஒன்றாக மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, அண்ணாமலை!
மதுரை: திண்டுக்கல்லில் பிரதமர் மோடி நிகழ்ச்சி முடிவடைந்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் மேற்கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையே பல்வேறு மோதல்கள் நிலவி வந்தது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தரப்பில் குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக் கூடாது என்பதற்கு 6 பேர் விடுதலை தீர்ப்பு ஒரு ஆதாரம் என்று விமர்சித்திருந்தார்.
மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி.. ஒருவழியாக தேனி வனத்துறை முன்பு ஆஜரானார் எம்பி ரவீந்திரநாத்

ஒரே விமானத்தில் பயணம்
அதேபோல் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், திமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை ஆகியோர் ஒரே விமானத்தில் பயணித்துள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை திருப்பியுள்ளது.

திண்டுக்கல் வந்த மோடி
பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தார். பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வந்த பின், ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார்.

பட்டமளிப்பு விழா
ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். அதேபோல் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார்.

மதுரைக்கு பயணம்
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மாலை 5.30 மணியளவில் முடிவடைந்தது. இதன்பின்னர் பிரதமர் மோடி கார் மூலமாக மதுரை விமான நிலையம் புறப்பட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கார்களில் மதுரை புறப்பட்டனர்.

வழியனுப்பி வைத்த தலைவர்கள்
தொடர்ந்து மாலை 6.25 மணியளவில், தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரையில் இருந்து புறப்பட்டு, விசாகப்பட்டினம் புறப்பட்டார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

மதுரை டூ சென்னை
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தில் இருந்து 7.15 மணிக்கு சென்னை புறப்படும் விமானத்தில் புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்ட அதே விமானத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் புறப்பட்டு சென்னை வந்துள்ளனர். இன்று நடைபெற்று வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித் ஷாவை வரவேற்க அண்ணாமலை சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.