விமானத்தில் திடீர் கோளாறு.. சரியான நேரத்தில் அலர்ட்! வெளியேறிய அமைச்சர்கள்! மதுரையில் பரபரப்பு
மதுரை : சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க இருந்த அமைச்சர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் வீடு திரும்பிய நிலையில், நல்லவேளை எங்கள கீழே இறக்கி விட்டாங்க என்று செய்தியாளர்களை சிரிக்க வைத்தார் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன்
தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்தியா முழுவதும், சில நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தினமும் விமான சேவை இயக்கப்படுகிறது. முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் மதுரை விமான நிலையத்திற்கு அடிக்கடி வருவது வழக்கம்.

அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.

மதுரை விமான நிலையம்
தங்கள் வீடுகளில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் அனைவரும் வந்து இருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் மதியம் 2 மணி அளவில் சென்னை செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. குறித்த நேரத்தில் விமானம் புறப்பட இருந்த நிலையில் விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்க இருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விமானத்தில் கோளாறு
இதனால் விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் தாமதமானது. இதனால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் 2 மணி நேரத்திற்குப் பிறகு மூன்று அமைச்சர்களும் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறினர்.

கலகல அமைச்சர்
வெளியே வந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் வெளியே வந்ததாகும் வேறு எதுவும் பிரச்சினை இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். நல்லவேளை எங்கள கீழே இறக்கி விட்டாங்க என்று செய்தியாளர்களிடம் நகைப்பை ஏற்படுத்தினார் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன்.












Click it and Unblock the Notifications