கல்விக் கடன்: வங்கி மேலாளர்களுக்கு தொழில் நுட்ப வசதி - நிதியமைச்சருக்கு வெங்கடேசன் எம்.பி கடிதம்
மாவட்டத்தில் வழிநடத்தும் வங்கி மேலாளருக்கு கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் வசதி இல்லை என்றுமதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை: கல்விக் கடன் வழங்கல் கண்காணிப்பு வழிநடத்தும் வங்கி மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படை தொழில்நுட்ப வசதி வழங்க வேண்டும் என,மதுரை லோக்சபா தொகுதி எம்.பி சு. வெங்கடேசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக சு. வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்குவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் இவ்வாண்டுக்கான இலக்கு நிச்சயித்து செயல் படதிட்டமிடப்பட்டது. அப்பொழுது எனது கவனத்துக்கு வந்த முக்கிய பிரச்சனையில் ஒன்று, மாவட்டத்தில் வழிநடத்தும் வங்கி மேலாளருக்கு (Lead Bank District Managers ) கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் வசதி இல்லை என்பது.

இது உண்மையில் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த அடிப்படை தகவல் கூட வழிநடத்தும் வங்கி மேலாளரால் அணுகமுடியாத நிலை இருந்தால் பின்னர் எப்படி மாவட்டங்களில் கல்விக்கடன் திட்டத்தை கண்காணிக்கவும், முன்னெடுக்கவும் முடியும்? இது மதுரைக்கான பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான பிரச்சனையாக உள்ளது, எனவே இது பற்றி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
"கல்விக் கடன் வழங்குதல் தொடர்பாக வித்யாலட்சுமி தளத்தில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வங்கிக் கிளையும் எவ்வளவு கடன் விண்ணப்பங்களை வரப் பெறுகின்றன, கடன் வழங்குகின்றன என்பதை கண்காணிக்கிற தொழில் நுட்ப வசதி வழி நடத்தும் மாவட்ட வங்கி மேலாளர்களுக்கு தனியாக "உட் செல்லும்" (Log in) வகையில் இல்லை. இதை வழங்குவது கல்விக் கடன் வழங்கலை விரைவுபடுத்த உதவும், வித்யா லட்சுமி திட்டத்தின் சிறப்பான செயலாக்கத்தையும் உறுதி செய்யும். எனவே அத்தகைய தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" எனக்கோரியுள்ளேன்.
இத்தகைய தொழில் நுட்ப வசதி தரப்படாததால் வழிநடத்தும் வங்கி மேலாளர்களின் பணி மிகச் சிரமமானதாக உள்ளது. ஒவ்வொரு வங்கியையும் அவர் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறுவது, கண்காணிப்பது என்பது கால விரயத்தை உருவாக்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் எளிதில் புள்ளி விபரங்களைப் பெற முடியாத ஒன்றாகவும் மாறியுள்ளது. எனவே மாவட்ட முதன்மை வங்கி மேலாளருக்கு இத்தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தர கேட்டுக்கொண்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications