சுவாமிநாதனின் தீர்ப்பு.. சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஜவாஹிருல்லா
மதுரை: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில காவல் படை இருக்கும் நிலையில் மத்தியக் காவல் படையிடம் அப்பொறுப்பை ஒப்படைத்த நீதியரசர் சுவாமிநாதனின் தீர்ப்பு ஆச்சரியத்தை தரவில்லை என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். அத்துடன் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான தீர்ப்பு என்றும் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும்.. 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழிசை, அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன், கம்யூனிஸ்டுகளை திருப்தி படுத்த காவலர்களை ஏவி விட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சகோதர சகோதரிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியாக அமையும்.
நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாய் இருந்தால் அது ஒப்புக் கொள்வதும் தங்களுக்கு சாதகம் இல்லை என்றால் நீதித்துறையே கேள்வி கேட்பதும், திமுகவின் கட்டுக்கடங்காத இந்து எதிர்ப்பின் வெளிப்பாடு. இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாத வேற்றுமையை விதைத்து கொண்டிருப்பது INDI கூட்டணி தான் என்று காட்டமாக கூறுகிறார்.
நீதிமன்ற உத்தரவுகள்
பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, "இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி, பக்தர்கள் மத சார்ந்த வழிபாட்டைச் செய்ய உடல் ரீதியாகத் தடுக்க செய்ததன் மூலம், DMK ஆட்சியின் முழுமையான தனியுரிமை அரசியலும், சமாதானப்படுத்தும் போக்கு வெளிப்படையாகியுள்ளது. சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது? இந்த அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகள் மீது எந்த மதிப்பும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரமானது, அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரான அநீதமானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்..
ஜவாஹில்லா கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டுவரும் தீவிர வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள், நேற்றைய தினம் மலையில் காலங்காலமாகத் தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு பிரச்சனை ஏற்படவேண்டும் என நோக்கத்தோடு தர்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகே புதிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்காக நீதிமன்ற ஆணை உள்ளது எனவும் கூறி அராஜகத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை சரியான முறையில் கையாண்டுள்ளது பாராட்டுக்குரியது.
இவ்விவகாரத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயன்ற சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை, சமத்துவம், சிறுபான்மையினரின் மத உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளதால் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமூக நல்லிணக்கம்
இந்தத் தீர்ப்பு ஒரு நீதிபதி தனது தனிப்பட்ட மத நம்பிக்கையை அதிகாரப்பூர்வமாக முன்வைக்கும் அபாயகரமான போக்கிற்கு மற்றொரு உதாரணமாக உருவாகியுள்ளது. இத்தீர்ப்பு அரசியலமைப்பின் 14, 15, 19, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது தமிழ்நாட்டில் பல ஆயிரமாண்டுகளாக நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாநில காவல் படை இருக்கும் நிலையில் மத்தியக் காவல் படையிடம் அப்பொறுப்பை ஒப்படைத்த நீதியரசர் சுவாமிநாதனின் தீர்ப்பு ஆச்சரியத்தை தரவில்லை.
சுவாமிநாதன் தீர்ப்பு
"இந்தியாவில் ஒரே அரசு ஒன்றிய அரசு மட்டுமே. மாநில அரசுகள் நிர்வாகம் செய்யப்படும் பிரதேசங்களாக (administered territories) மட்டுமே இருக்க வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவரான எம் எஸ் கோல்வால்கரின் தீவிரப் பற்றாளரான நீதியரசர் சுவாமிநாதனிடம் இந்தத் தீர்ப்பைத் தான் எதிர்பார்க்க இயலும்
மொத்தத்தில் நீதியரசர் சுவாமிநாதன் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது" என்று காட்டத்துடன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications