அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வர வேண்டும்.. ஓபிஎஸ்-க்கு மறைமுக அழைப்பு விடுத்த செல்லூர் ராஜு!
மதுரை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், தமிழக மக்களை திமுக அரசு கசக்கி பிழிகிறது. இதுவரை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை.

மின் கட்டணம்
ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது 39 சதவிகிதம் மின்சார கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு கேலி கூத்தாகியுள்ளது. பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது.
எப்போது மின்சாரம் வரும், போகும் என்று புரியாமல் மக்கள் திணறி வரும் சூழலில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்திய போது போராடிய மு.க.ஸ்டாலின், இப்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த பின், மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல் டிஜிபி சைலேந்திர பாபு, முதலில் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு இல்லை என்று கூறிவிட்டு, பின்னர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரில் இருந்து காவல்துறை வரை அந்த மாவட்டத்தில் அனைவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று விமர்சித்தார்.

அதிமுகவில் சாதி இல்லை
அதிமுகவில் சாதி சார்ந்து யாருக்கும் பதவிகள் வழங்கும் வழக்கம் இல்லை. ஆனால் ஒரு சமூகத்தில் இருந்த முக்கியத் தலைவர் நீக்கப்பட்ட பின், அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது வழக்கமானது. ஏனென்றால் அது அந்த சமுதாய மக்களுக்காக பதவி வழங்கப்பட்டிருக்கலாம். அதேபோல் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் சிறப்பாக பணியாற்றக் கூடியவர் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ்-க்கு மறைமுக பதில்
தொடர்ந்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுவிட்டு, மீண்டும் வந்தவர்கள் ஏராளம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்படி வந்தவர்களை வரவேற்று பதவி கொடுத்துள்ளார். அதேபோல் அதிமுகவில் இருந்து இப்போது பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications