கோவில்ல என்ன சாதி வேண்டி கிடக்கு! தமிழகத்தில் படிச்சவங்க அதிகம்..பாகுபாடும் அதிகம்! விளாசிய நீதிபதி
மதுரை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், எவ்வித பாரபட்சமும் பார்ப்பது கிடையாது. யாருக்கும் முதல் மரியாதையும் வழங்குவது கிடையாது என தமிழக அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது. அரசு தரப்பின் பதிலை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது அதே நேரத்தில் பாகுபாடும் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்," சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் பேரின் வளத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.
இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது. என அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை ஆகவே
எனவே கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி மரியா கிளாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி," கோவில் நிகழ்வுகளிலும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோவில் பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது அனைவரும் சமமே என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? அரசின் நிலைப்பாடு அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம். நீதிமன்றத்தில் இதுபோன்று சொல்ல முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சாதிய பாகுபாடும் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கண்டதேவி கோவில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications