எடப்பாடியை தொடர்ந்து துணை ஜனாதிபதி வந்தபோதும் 2 முறை மின்வெட்டு! மீனாட்சி கோயிலில் என்ன நடந்தது?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோயிலுக்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கோயிலின் கிழக்கு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை குடியரசுத் தலைவர் இந்த வாயில் வழியாக உள்ளே சென்று வெளியே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மின்தடை
இருப்பினும், முக்கிய நுழைவு வாயிலான கிழக்கு கோபுரப் பகுதியில் விளக்குகள் எரியவில்லை. மேலும், சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு முறை மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. துணை குடியரசு தலைவரின் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் அவர் தரிசனத்தை முடித்துவிட்டு அவர் வெளியே வந்த போது மின்தடை ஏற்பட்டது. பிறகு கிழக்கு கோபுரத்தின் முன்பு துணை குடியரசுத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ருக்மிணி பழனிவேல்ராஜன்
இது குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சர் பிடிஆரின் தாயாருமான ருக்மிணி பழனிவேல்ராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை குடியரசுத் தலைவரின் வருகையின்போது ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் மேலும், "மாநிலத்தில் எவ்வளவு மின்தடை இருக்கிறது என்பதை கடவுள் காண்பிக்கிறார். மின்தடை நிவர்த்தியாக வேண்டும் என்று நாம் மீனாட்சியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மின்வெட்டுதான் இந்த நிலைக்கு காரணம். மின்வெட்டின் நிலையை அம்மன் நாட்டுக்கு காண்பிக்கிறார் போல" என்று அவர் கூறினார்.
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
இதற்கிடையே மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். துணை குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணி முதல் கோயிலுக்கு முழுமையாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர் உதவிக்காக மட்டுமே அங்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரிசனத்தை முடித்துவிட்டு துணை குடியரசு தலைவர் கிழக்கு கோபுரத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோயிலின் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டதாக அமைச்சர் விளக்கியுள்ளார். இதையடுத்து இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மின்சாரத்திலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்துக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை
முன்னதாக நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தான் இன்று துணை குடியரசுத் தலைவரின் வருகையின்போதும் மின்தடை ஏற்பட்டிருப்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தான் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார்.




Click it and Unblock the Notifications
