இதுதான் தமிழ்நாடு.. மதுரை அருகே மசூதி திறப்பு விழாவிற்கு சீர்வரிசையுடன் சென்ற இந்துக்கள்!
மதுரை: மதுரை அருகே தேனூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட மசூதி திறப்பு விழாவிற்கு, இந்துக்கள் கோயிலில் இருந்து சீர்வரிசையுடன் சென்று சிறப்பித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தேனூர் கிராமத்தில் உள்ள பள்ளி வாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் தாய்மாமன் சீர் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தேனூர் கிராம சாவடியில் இருந்து இந்துக்கள் ஊர்வலமாக பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு வாழ்வோம் என்பதைப் பறைசாற்றும் நிகழ்வாக பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
சீர் கொண்டு வந்த இந்து சமூகத்தை சேர்ந்த கிராமப் பெரியவர்களுக்கு இஸ்லாமிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் இஸ்லாமிய குழந்தைகள் அன்பளிப்புகள் வழங்கியும் இளைஞர்கள் வாசல் வரை வந்து வரவேற்றும் பள்ளிவாசலுக்குள் அழைத்து சென்றதும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தேச ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் நினைவுபடுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காலம் காலமாக இந்து கோவில் திருவிழாவுக்கு முஸ்லீம்கள் வரி கொடுப்பதும், பள்ளி வாசலுக்கு இந்துக்கள் வரி கொடுப்பதும் தொடர்ந்து வருவதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே புரட்டாசி மாதம் தேனூர் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் பால்குட அக்னி சட்டி நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் சர்பத் மோர் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிலையில் தற்போது நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் சீர்வரிசை கொண்டு வந்துள்ளனர்.

இந்தியாவின் அடையாளமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் நல்லிணக்கம் தான். அதைச் சீர்குலைக்கும் சிற்சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் இன்றைய காலகட்டத்தில், மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக கொண்டாடுவது நெகிழ்ச்சிக்குரிய விஷயம்.


Click it and Unblock the Notifications
