எங்கள் புகழை கண்டு சந்தோஷப்பட்ட மனிதர் அவர்.. சாலமன் பாப்பையா மறைவால் கலங்கி போன பாரதி பாஸ்கர்!
மதுரை: தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் ஓய்வில் இருந்த அவர், 90 வயதில் காலமானார். சாலமன் பாப்பையா மறைவு தமிழ்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என்று பன்முக திறமையை கொண்டவர்.
1936ல் மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்த அவர், எளியோருக்கு புரியும் வகையில் மொழிநடையில் தமிழ் மொழியையும், இலக்கியங்களையும் கொண்டு சென்றவர். திருக்குறள் கழகத் தலைவர், கம்பன் கழகத் தலைவராக இருந்த சாலமன் பாப்பையா, பல்வேறு நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தியவர்.

இவரின் பட்டிமன்றங்களில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் இருவரும் நிரந்தர பேச்சாளர்களாக இருந்தனர். சாலமன் பாப்பையாவின் மறைவு பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் மனதை நொறுக்கி உள்ளது. இதையடுத்து கண்ணீருடன் பாரதி பாஸ்கர் பேசுகையில், என்னுடைய தகப்பனை இழந்து நிற்கிறேன்.. கடவுள் என்றால் அவர் தான்..
எனக்கு உடல்நலக் குறைவு வந்த போது, பாரதி மேடைக்கு வரவில்லை என்றால் இனி நான் மேடைக்கு வரமாட்டேன் என்று சொன்னார். எங்களுக்கு அவர் ஆதரவு கொடுத்ததால், நாங்கள் மிகப்பெரிய புகழ் அடைந்தோம். அதனை பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டார். அவரின் பெருந்தன்மை மலை மாறியது. எல்லா சமயங்களும் ஒன்று என்பதையே வாழ்நாள் முழுக்க தன்னுடைய செய்தியாக வைத்தார்.
ஒரு கடவுள் தான்.. ஒன்று பரம்பொருள்.. நாம் அதன் மக்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இனி அந்த இடத்திற்கு யார் வர முடியும். அவருக்கு முன்பும் யாரும் கிடையாது. அவருக்கு பின்பும் யாரும் வர முடியாது. தமிழ் இலக்கியத்திற்கும், பட்டிமன்றத்திற்கும் அவர் செய்ததை போல் யாராலும் செய்ய முடியாது. நடுவர், நடுவர் என்று அவரை தான் சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.
அவரின் ஆன்மா எங்களை என்றும் ஆசீர்வதிக்கும் என்று நம்புகிறேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இந்த இழப்பில் இருந்து எப்படி மீண்டு வருவோம் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். கண்ணீருடன் வேதனையுடன் பாரதி பாஸ்கர் பேசியது அனைவரையும் கலங்க செய்துவிட்டது.


Click it and Unblock the Notifications
