மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு போலி நீட் சான்றிதழ்களுடன் வந்த வட மாநில மாணவர்..விசாரித்தால் திடுக் தகவல்
மதுரை: எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு போலியாக தயாரித்த நீட் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களுடன் வந்த இமாசல பிரதேச மாணவர், கல்லூரி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார். போலீசரால் கைது செய்யப்பட்ட அந்த மாணவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் மதிபெண்கள் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடத்தப்படும் நிலையில், நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

நீட் தேர்வில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை என தேசிய தேர்வு முகமை கூறினாலும், சமீப காலமாக பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்தான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு போலி சான்றிதழ்களுடன் வந்த மாணவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மதுரை தோப்பூரில் நடந்து வருகின்றன. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரியில் முதல் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்புக்கான் அனைத்து இடங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இமாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் என்ற 22 வயது இளைஞர், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்து உள்ளதாக சான்றிதழ்களுடன் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரது சான்றிதழ்களை வாங்கிய கல்லூரி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் இளைஞர் அபிஷேக் வழங்கிய நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது.
இது குறித்து அபிஷேக்கிடம் கேட்ட போது, அவர் முன்னுக்குபின் முரணான பதில் கூறினார். இதனால், போலீசாருக்கு கல்லூரி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அபிஷேக்கையும் அவரது தந்தை மகேந்திர சிங்கையும் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல திடுக் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் பள்ளி படிப்பை முடித்த அபிஷேக், 2 தடவை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்து இருக்கிறார்.
3-வது முறையாக நீட் தேர்வு எழுதிய அவருக்கு வெறும் 60 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் எப்படியாவது மருத்துவ கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என நினைத்த அபிஷேக், போலியாக மதிபெண் சான்றிதழ் தயரித்துள்ளார். அதில், 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்றதாக மாற்றிவிட்டு, ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் சீட் ஒதுக்கீடு பெற்றுள்ளதாகவும் போலி சான்றிதழ் தயாரித்துள்ளார்.
இந்த இரண்டு சான்றிதழ்களுடன் தந்தையும் மகனும் ராமநாதபுரம் வந்து இருக்கிறார்கள். இதையடுத்து, அபிஷேக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரித்து வருகிறர்கள். அபிஷேக் போலி சான்றிதழ் தயாரித்தது அவரது தந்தைக்கே தெரியாது என சொல்லப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications