இறந்த மணமக்களுக்கு திருமணம்! மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து! "மெய்சிலிர்க்கும்" நிகழ்வு
மங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மணமக்களுக்கு நடந்த வினோத திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ட்விட்டரில் ஒரு இளைஞர் தான் ஒரு திருமணத்திற்கு சென்று வந்ததாக குறிப்பிட்டு வீடியோவையும் அனுப்பியுள்ளார். திருமணத்திற்கு போனதை எல்லாமா ட்வீட்டாக போடுவார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஆம் அந்த நெட்டிசன் போனது இறந்த போனவர்களின் திருமணத்திற்கு!.. என்ன மக்களே ஒரு நிமிஷம் கண்ணை கசக்கிவிட்டு மீண்டும் படிக்கிறீர்களா!. நீங்கள் படித்தது சரிதான்.. 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஜோடிக்குத்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

பிரேத திருமணம்
இந்த திருமணத்திற்கு பிரேத திருமணம் என்பார்கள். கர்நாடகா மாநில தட்சினா கன்னடா மாவட்டத்தில்தான் இந்த பெயரில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த பிரேத திருமணத்தை ஒரு சடங்காக பார்த்து அதை பின்பற்றி வருகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தோருக்கு திருமணம்
இந்த பிரேத திருமணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த பிரேத திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற ஒரு சம்பிரதாயம் மிகவும் தீவிரமாக நடத்தப்படுகிறது.

வாழ்க்கை
திருமணம் செய்யாமல் யாருடைய வாழ்க்கையும் முழுமை அடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால்தான் பல வீடுகளில் மகனோ மகளோ எத்தனை அழிச்சாட்டியம் செய்தாலும் அந்த தாய் தந்தைக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுவார்கள். இந்த திருமணங்கள் கடைசி வரை எந்த பிரச்சினையும் இன்றி நிலைத்து நிற்பதும் உண்டு, பிரச்சினையாகி நீதிமன்ற வாயில்களுக்கு செல்வதும் உண்டு.

ஆத்மா
ஆனால் ஆத்மா எனும் போது யாரையாவது காதலித்துவிட்டு இறந்திருக்கலாம், திருமண வயதில் இறந்திருக்கலாம், தனக்கு இப்படித்தான் திருமணம் ஆக வேண்டும் என்ற கனவுடன் இறந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களின் ஆத்மா அதன் லட்சியம் நிறைவேறாவிட்டால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கும் என்பது நிரூபிக்கப்படாத ஒரு பேசுபொருளாகும்.

ஆத்மாக்களுக்கு திருமணம்
எனவே இது போன்ற ஆத்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்து மோட்சம் அடைய இந்த சடங்கை பின்பற்றி வருவதுதான் இந்த பிரேத திருமணம் ஆகும். நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ அப்படியேதான் இந்த பிரேத திருமணங்களும் நடைபெறும். இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன், மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கைகளில் மணமகளும் மணமகனும் (அவர்களது ஆடைகளுடன் உறவினர்கள்) 7 முறை சுற்றி வருவது வழக்கம்.

திருமணம் என்றாலே விருந்துதான்!
திருமணம் என்றாலே விருந்துதானே. இந்த திருமணத்திலும் விருந்து இல்லாமலா! மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. திருமண சடங்குகள் மீது நம்பிக்கை வைத்திருப்போர் இந்த வீடியோக்களை பார்த்து புல்லரித்து போயுள்ளனர். கலாச்சாரம், பண்பாடு மீது நம்பிக்கையில்லாத சிலர் இதெல்லாம் முட்டாள்தனம் என்கிறார்கள். இன்னும் சிலர் இந்த பிரேத திருமணங்கள் கொரியா அல்லது சீன நாட்டின் கலாசாரமாக இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications