என்ன கொடுமை இது? ஓடும் ரயிலில் 19 வயது கல்லூரி மாணவிக்கு திடீர் 'ஹார்ட் அட்டாக்'.. பதறிய பயணிகள்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போது அங்கிருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள் துரிதமாக செயல்பட்டதால் மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டில் இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பீதியை ஏற்படுத்தும் மாரடைப்பு
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. மணமேடையில் இருந்த மணமகன் மாரடைப்பால் உயிரிழப்பது; நடனம் ஆடிய இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைவது போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல், மருத்துவ உலகமும் திணறி வருகிறது. இதுபோன்ற சூழலில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது.

கல்லூரி மாணவி
மும்பை புறநகர் பகுதியான கஜ்ராத்தைச் சேர்ந்தவர் பிங்கி ராய் (19). இவர் கல்லூரியில் படித்துக் கொண்டே கன்சோலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை வழக்கம் போல பிங்கி ராய் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்.

திடீர் நெஞ்சு வலி
இவர் தானேவில் இறங்கி வேறு ரயிலுக்கு மாற வேண்டும் என்பதால், ரயில் படிகட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அய்ரோலி ரயில் நிலையம் அருகே வந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக நினைத்த அவருக்கு, தாங்க முடியாத அளவுக்கு வலி அதிகமாகியது. இதனால் அவர் அங்கேயே படுத்திருக்கிறார். ஆனால் மற்ற பயணிகள் இதை கவனிக்கவில்லை. அப்போது ரயிலில் ஏறி பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்து கொண்டிருந்த 2 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் கல்லூரி மாணவி படுத்து கிடப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அவரை எழுப்ப முயற்சித்த போது, அவர் வலியில் முனகிக் கொண்டிருப்பதை கேட்டனர்.

துரிதமாக செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள்
இதையடுத்து, தானே ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், அவரை இருவரும் மாணவியை தூக்கிக்கொண்டு மேலாளர் அறைக்கு சென்று முதலுதவி அளித்தனர். ஆனால், அவரது நிலைமை மோசமாகவே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித் மருத்துவர்கள், மாணவிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக செயல்பட்டதால் மாணவியின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications