கொரோனா 3ஆம் அலை? மகாராஷ்டிராவில் உயரும் டெல்டா பிளஸ் கேஸ்கள்.. வேக்சின் போட்டவர்களையும் தாக்குகிறது
மும்பை: மகாராஷ்டிராவில் இதுவரை 76 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு டோஸ் வேக்சின் போட்ட 10 பேர், ஒரு டோஸ் வேக்சின் போட்ட 12 பேருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்புகள் நான்கு லட்சத்தைக் கூட தாண்டியது. அதேபோல உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியது.
நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஒருபுறம் கொரோனாவாலும் மறுபுறம் சரியான நேரத்தில் ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்டவை கிடைக்காமலும் நோயாளிகள் உயிரிழந்தனர். தற்போது தான் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

2ஆம் அலை
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இந்தளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல பொதுமக்களின் அலட்சியம், மந்தமாக நடைபெற்ற வேக்சின் பணிகள் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா கொரோனாவே வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக அமைந்ததாக பல்வேறு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்டா பிளஸ்
இந்தச் சூழலில் டெல்டா கொரோனா வைரசின் புதிய திரிபு ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனா, தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மற்றும் டெல்டா கொரோனாவில் கலவை எனச் சொல்லாம். அதாவது டெல்டா பிளஸ் கொரோனா வைரசில் K417N என்ற மாறுபாடு உள்ளது. இந்த K417N மாறுபாடு பீட்டா உருமாறிய கொரோனாவில் தான் முதலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேக்சின் போட்டவர்களுக்கும் பாதிப்பு
இப்போது மகாராஷ்டிராவில் இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது புதியதொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 10 பேர் வேக்சின இரண்டு டோஸ்களையும் 12 பேர் ஒரு டோஸ் வேக்சினையும் எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு
அதேபோல டெல்டா பிளஸ் கொரோனாவால் மகாராஷ்டிராவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். அதில் இரண்டு பேர் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் இருப்பினும் புனே, கோலாப்பூர், அகமது நகர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

ஏன் கவலை
மகாராஷ்டிராவில் மட்டும் இப்போது டெல்டா கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. இது பிற மாநிலங்களில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், முதல் அலை சமயத்திலும் சரி, 2ஆம் அலை சமயத்திலும் சரி, முதலில் மகாராஷ்டிராவில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதோ, அதுவே தான் நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சுதந்திர தினத்தன்று தனது உரையில், "மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை" என எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications