பெட்ரோல் விலையேற்றம்... ஏன் அமைதியாக இருக்கீங்க... பாலிவுட் பிரபலங்களை துளைத்தெடுக்கும் காங்கிரஸ்
மும்பை: எரிபொருள் விலையேற்றம் தொடர்பாகப் பாலிவுட் நடிகர்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர், அவர்களின் படப்பிடிப்புகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. இதனால் நாட்டிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்வதாகவும் இதைத் தடுக்க முந்தைய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே எரிபொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.

அனுமதிக்க மாட்டோம்
இந்நிலையில், எரிபொருள் விலையேற்றம் தொடர்பாகப் பாலிவுட் நடிகர்கள் மவுனம் காப்பது ஏன் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ""மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் படங்களின் படப்பிடிப்பை நடத்தவும் திரைப்படங்களை வெளியிடவும் அனுமதிக்க மாட்டோம்.

மவுனம் காப்பது ஏன்
பிரபலங்கள் நாட்டிலுள்ள மக்களிடம் பொறுப்பாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கச்சார்பான நிலைப்பாட்டை எடுப்பது எப்படிச் சரியாக இருக்கும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் பேசிய அவர்கள், இப்போது மட்டும் மவுனம் காப்பது ஏன்? அவர்கள் இது குறித்துப் பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடா குடிமகன்
நானா படோலின் இந்தக் கருத்திற்குத் தேசியவாத காங்கிரசும் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் ஜிதேந்திர அவாத் கூறுகையில், "ரிஹான்னா கூறுவதை தான் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அக்ஷய் குமார் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவரே ஒரு கனடா நாட்டு குடிமகன். இங்குச் சம்பாதிக்கும் பணத்தை அவர் கனடாவுக்கு எடுத்துச் செல்கிறார். இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்துப் பேச கனடா குடிமகனுக்கு என்ன உரிமை உண்டு? " என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக புகார்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் இந்தக் கருத்திற்கு அம்மாநிலத்திலுள்ள பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் நானா படோல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் பாஜக புகார் அளித்துள்ளது. நாட்டிற்கு ஆதரவாக நிற்பவர்களைக் காங்கிரஸ் வெளிப்படையாக அச்சுறுத்துவதாகவும் இதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் பாஜக தெரிவித்துள்ளது.